2016-01-19 15:24:00

பாவமில்லாத புனிதர் இல்லை, வருங்காலம் இல்லாத பாவி இல்லை


சன.19,2016. மனிதரின் தோற்றத்தையும் கடந்து அவரது அகத்தைப் பார்க்கிறார் கடவுள் என்று, இச்செவ்வாய் காலையில் சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் நிறைவேற்றிய திருப்பலியில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.

சிறுவன் தாவீதை இஸ்ரயேலின் அரசராகத் திருப்பொழிவு செய்யுமாறு, இறைவாக்கினர் சாமுவேலிடம் ஆண்டவர் கூறிய இந்நாளின் முதல் வாசகத்தை(1சாமு.16:1-13) தனது இத்திருப்பலி மறையுரைக்குப் பயன்படுத்தினார் திருத்தந்தை. 

தாவீதின் வாழ்வில் வெளிப்படுவது போன்று, புனிதர்களின் வாழ்விலும் சோதனைகளும், பாவங்களும் இருக்கின்றன என்று கூறிய திருத்தந்தை, பாவமில்லாத புனிதர் இல்லை, வருங்காலம் இல்லாத பாவி இல்லை என்றும் கூறினார்.

அரசர் சவுல் மூடிய இதயத்தைக் கொண்டிருந்ததாலும், தமக்கு சவுல் பணியாதிருந்ததாலும் ஆண்டவர் அவரைப் புறக்கணித்து மற்றோர் அரசரைத் தேர்ந்தெடுக்கத் தீர்மானித்தார் என்றுரைத்த திருத்தந்தை, தாம் மனிதரின் தோற்றத்தைப் பார்ப்பதில்லை, அதையும் கடந்து அகத்தைப் பார்ப்பதை ஆண்டவர் சாமுவேலுக்குத் தெளிவுபடுத்தினார் என்று கூறினார்.

நாம் அடிக்கடி வெளித்தோற்றங்களுக்கு அடிமையாகி விடுகிறோம், வெளித்தோற்றங்களைப் பின்தொடர்ந்து செல்லவும் நம்மை அனுமதிக்கிறோம், ஆனால் கடவுள் உண்மையை அறிகின்றார், தாவீதின் கதையிலும், அவரது தந்தை ஈசாய் தனது ஏழு மகன்களையும் சாமுவேலிடம் காட்டினார், ஆனால் ஆண்டவர் அவர்களில் யாரையும் தேர்ந்துகொள்ளவில்லை, ஆடு மேய்த்துக்கொண்டிருந்த சிறுவன் தாவீதையே தேர்ந்தெடுத்தார் என்றும் விளக்கினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

தாவீதின் வாழ்வு முழுவதும், ஆண்டவரால் தேர்ந்தெடுக்கப்பட்ட மற்றும்  ஆண்டவரால் திருப்பொழிவு செய்யப்பட்ட ஒரு மனிதரின் வாழ்வாகத்தான் இருந்தது, ஆனால் ஆண்டவர் தாவீதை புனிதராக்கவில்லை, அரசர் தாவீது, புனித அரசர் தாவீது, ஆனால் அவர் தனது நீண்ட வாழ்வில் பாவம் செய்த பின்னர் புனிதரானார் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ். அரசை ஒன்றிணைக்கவும், இஸ்ரயேல் மக்களை வழிநடத்தவும் திறமையைக் கொண்டிருந்த தாவீது சோதனைக்கு உட்பட்டார், பாவங்கள் செய்தார், அவர் ஒரு கொலைகாரர், தனது பாலியல் பாவச் செயலை மறைப்பதற்காக, கொலை செய்யுமாறு கட்டளையிட்டார், அரசர் தாவீது பெரிய பாவியாக இருந்தாலும் மனம் வருந்தும் ஒருவராகவும் இருந்தார், இந்த மனிதரின் வாழ்வு நம் தனிப்பட்ட வாழ்வு குறித்து சிந்திக்க வைக்கின்றது என்றும் தன் மறையுரையில் கூறினார் திருத்தந்தை. நாம் புனிதர்களாக, அவரின் மக்களின் ஓர் அங்கமாக வாழ நாம் ஆண்டவரால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளோம், தூய வாழ்வை நோக்கிய பாதைக்கு நாம் ஆண்டவரால் திருப்பொழிவு செய்யப்பட்டுள்ளோம், பாவமில்லாத புனிதர் இல்லை, வருங்காலம் இல்லாத பாவி இல்லை என்று தனது மறையுரையை நிறைவு செய்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மேலும், “ஏழைகள் மற்றும் மறக்கப்பட்டவர்களிடம் நெருக்கமாக இருக்கவும், அவர்களுக்கு உண்மையான நம்பிக்கையை அளிக்கவும் நற்செய்தி நமக்கு அழைப்பு விடுக்கின்றது” என்பது, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் டுவிட்டர் செய்தியாக இச்செவ்வாயன்று வெளியிடப்பட்டுள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.