2016-01-19 15:35:00

ஒருங்கிணைந்த வளர்ச்சிக்கு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு ஆதரவு


சன.19,2016. உலகப் பொருளாதார அமைப்பை கட்டியெழுப்புவதற்குத் தன்னை அர்ப்பணித்துள்ள உலகளாவிய அமைப்பு, ஒருங்கிணைந்த வளர்ச்சிக்கு ஆற்றும் சேவைக்கு ஆதரவு வழங்குவதாக தெரிவித்துள்ளார் திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின்.

“அக்கறையற்ற உலகத் தாராளமயமாக்கலைப் புறக்கணித்தல்:உலகளாவியப் பொருளாதாரத்தைப் பேணுதல்” என்ற தலைப்பில், உரோம் நகரில் இச்செவ்வாயன்று நிறைவடைந்த கருத்தரங்கில் உரையாற்றிய கர்தினால் பரோலின் அவர்கள், பெரிய பொருளாதார அமைப்புகளுக்கும், அரசியல் தளங்களுக்கும் இடையே உலகளாவிய அமைப்பு நடத்திவரும் உரையாடல்கள் குறித்த தனது பாராட்டுதல்களைத் தெரிவித்தார்.

உலகளாவிய அமைப்பு நடத்திய இக்கருத்தரங்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் போதனைகளோடு ஒத்துப் போகின்றது என்றும், செல்வந்தர், ஏழைகள், அதிகாரத்தில் இருப்போர், வலிமையற்றோர், அரசியல்வாதிகள், தொழில் அதிபர்கள் என எல்லாரும், ஒருமைப்பாட்டுணர்வில் தங்களின் பணிகளை, பொது நலனுக்கு அர்ப்பணிக்க வேண்டுமென்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அழைப்பு விடுத்து வருகிறார் என்றும் கூறினார் கர்தினால் பரோலின்.

சுற்றுச்சூழலைப் பாதுகாத்து, அதனை மேம்படுத்துவதற்கு உடனடி நடவடிக்கைகளை எடுக்குமாறு அனைத்து அரசுகளின் தலைவர்களையும் திருத்தந்தை ஐ.நா.வில் கேட்டுக்கொண்டதையும் குறிப்பிட்டுப் பேசினார் கர்தினால் பரோலின்.

இக்கருத்தரங்கில், இன்றைய உலகப் பொருளாதாரப் பிரச்சனைகளுக்கு அறுதியான தீர்வுகளை எட்ட முடியாவிடினும், இது, உலகம் சந்திக்கும் முக்கிய பிரச்சனைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கு நல்ல தளமாக அமைந்துள்ளது என்றும் தனது உரையில் பாராட்டினார் திருப்பீடச் செயலர் கர்தினால் பரோலின்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.