2016-01-18 15:24:00

வாரம் ஓர் அலசல்–நிகழ்காலம் மின்ன, கடந்த காலம் பாடமாகட்டும்


சன.18,2016. இத்தாலியின் வெனிஸ் நகரில் 16ம் நூற்றாண்டில் வாழ்ந்த Tiziano Vecelli (1488/1490 – 27,ஆக.1576), அல்லது ஆங்கிலத்தில் Titian என்ற ஓவியர், தனது “விவேகத்தின் உருவகம் (Allegory of Prudence) என்ற ஓவியத்தில், விவேகத்தை மூன்று தலைகளைக் கொண்ட ஒரு மனிதராகச் சித்தரித்திருக்கிறார். ஒரு தலை, வருங்காலத்தை நோக்கியிருக்கும் ஓர் இளைஞனுடையது. இரண்டாவது தலை, நிகழ்காலத்தை நோக்கிக்கொண்டிருக்கும் ஒரு முதிர்ச்சி அடைந்த மனிதரின் தலையாகும். மூன்றாவது தலை, கடந்த காலத்தைப் பார்த்துக்கொண்டு இருக்கும் ஒரு ஞானமுள்ள முதியவரின் தலையாகும். இந்த மூன்று தலைகளும், மூன்று காலங்களைக் குறிக்கும், ஓநாய், சிங்கம், நாய் ஆகிய மூன்று விலங்குகளின் தலைகளுக்கும் மேல் வரையப்பட்டுள்ளது. இம்மனிதத் தலைகளுக்கு மேலே ஓவியர் Tiziano அவர்கள், “கடந்த காலத்தின் அனுபவத்தைக் கொண்டு, வருங்காலத்தைப் பாழ்படுத்தி விடாதபடி, நிகழ்காலத்தில் மனிதர் விவேகத்தோடு நடந்து கொள்ள வேண்டும்”என்று பொருள்படும் ஓர் இலத்தீன் சொற்றொடரை எழுதியிருக்கிறார். EX PRAETERITO/PRAESENS PRUDENTER AGIT/NE FUTURA ACTIONẼ DETURPET (“From the experience of the past, the present acts prudently, lest it spoil future actions”). இதை இன்னும் விளக்கமாகச் சொல்ல வேண்டுமெனில், நமது கடந்த காலத் தோல்விகளாலும், வருங்காலத்தில் அந்த தோல்விகள் வந்து விடுமோ என்ற பயத்தாலும் இருக்கும் மனிதரின் கவலையே, நிகழ்காலத்தில் அனுபவிக்க வேண்டியவைகளை, அனுபவிக்க முடியாதபடிச் செய்து விடுகிறது என்பதாகும். ஒவ்வொரு மனிதரது வாழ்க்கையிலும், கடந்தகாலம், நிகழ்காலம், வருங்காலம் ஆகிய மூன்று காலங்கள் நிச்சயம் உண்டு. இந்தக் காலங்களை, எப்படி கையாள வேண்டும் என்பது நம் கையில்தான் உள்ளது. நாம் காலங்களைக் கையாளும் விதத்தை பொருத்தே, நமது வாழ்வின் வெற்றியும் நிர்ணயிக்கப்படுகிறது. எனவே கால நிர்வாகம் என்பது வாழ்க்கையில் மிகவும் முக்கியம். அதேநேரம், ஒரு காலம் கற்றுத்தரும் பாடம், அடுத்த காலத்திற்குப் படிப்பினையாக அமைய வேண்டும், குறிப்பாக, நாம் கடந்து வந்த காலம். எடுத்துக் காட்டாக, அண்மையில் ஏற்பட்ட சென்னை வெள்ளம். சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் பெய்த கன மழையின் மூலம் மக்கள் பெற வேண்டிய பாடங்கள் நிறையவே இருக்கின்றன.

கடந்த காலம், நிகழ்காலத்திற்கும், வருங்காலத்திற்கும் ஒரு பாடமாக அமைய வேண்டுமென்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும் இஞ்ஞாயிறு மாலையில் மிக அழுத்தமாக வலியுறுத்திச் சொன்னார். 1870ம் ஆண்டில் உரோம் நகரில் கட்டப்பட்ட பெரிய யூதமதத் தொழுகைக் கூடத்திற்கு இஞ்ஞாயிறு மாலையில் சென்று உரையாற்றியபோது, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இவ்வாறு கூறினார். இரண்டாம் உலகப் போரின்போது, 1943ம் ஆண்டு அக்டோபர் 16ம் தேதி, நாத்சிகள், ஆயிரத்துக்கு மேற்பட்ட யூத ஆண்கள், பெண்கள் மற்றும் சிறாரை, உரோம் நகரிலிருந்து Auschwitz வதைமுகாமுக்கு கொண்டு சென்றதை நினைவுகூர்ந்து, யூத இன அழிப்புக் கோட்பாட்டில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினார். அதேநேரம், அந்த யூத இன அழிவிலிருந்து தப்பித்து உயிர்வாழும் அனைவருக்கும் தனது வாழ்த்தையும் தெரிவித்தார்.

யூத இன அழிப்புக் கோட்பாட்டில், ஐரோப்பிய யூதர்கள், கடும் வன்முறை மற்றும் அடக்குமுறைகளை அனுபவிக்க வேண்டியிருந்தது. யூதர்கள் என்ற ஒரே காரணத்திற்காக மட்டும், அறுபது இலட்சம் யூதர்கள், மிகக் கொடூரமான மனிதமற்ற காட்டுமிராண்டித்தனமான முறைக்குப் பலியானார்கள். இக்கொடுமை, கடவுள் இடத்தில் மனிதரை வைக்க விரும்பிய கருத்தியலின் பெயரில் நடந்தது. இன்று அம்மக்களை சிறப்பாக நினைவுகூர்கிறேன். அம்மக்களின் துன்பங்கள், அச்சம் மற்றும் கண்ணீர் ஒருபோதும் மறக்கப்படமாட்டாது, கடந்த காலம், நிகழ்காலத்திற்கும், வருங்காலத்திற்கும் ஒரு பாடமாக அமைய வேண்டும். இந்த யூத இன ஒழிப்பு நிகழ்வு, மனித மாண்பு மற்றும் அமைதியைக் காப்பதற்குத் தகுந்த நடவடிக்கை எடுப்பதற்கு எப்போதும் மிகுந்த விழிப்புடன் இருக்க வேண்டுமென்று நமக்குக் கற்றுத் தருகிறது. கடந்த காலம், நிகழ்காலத்திற்கும், வருங்காலத்திற்கும் ஒரு பாடமாக அமைய வேண்டும் என்றுரைத்த திருத்தந்தை, இன்றைய உலகில் நாம் எதிர்கொள்ளும் பெரிய சவால்களையும் மறக்கக் கூடாது என்று கேட்டுக்கொண்டார். மேலும்...

கலவரங்கள், சண்டைகள், வன்முறைகள் மற்றும் அநீதிகள், மனித சமுதாயத்தில் ஆழமான காயங்களைத் திறக்கின்றன, மனிதர், மனிதருக்கு எதிராகச் செய்யும் வன்முறை, எந்த ஒரு மதத்திற்கும், குறிப்பாக, ஒரே கடவுள் கொள்கையுடைய மூன்று பெரிய மதங்களுக்கும் முரணானது. வாழ்வு, புனிதமானது, இது கடவுளின் கொடை. "கொலை செய்யாதே" (வி.ப.20:13) என்று ஐந்தாவது கட்டளை சொல்கிறது. கடவுள் வாழ்வின் கடவுள், அவர் வாழ்வை எப்போதும் ஊக்குவித்து பாதுகாக்க விரும்புகிறார். கடவுளின் சாயலாகப் படைக்கப்பட்ட நாம் அதேபோல் வாழ அழைக்கப்படுகிறோம். படைக்கப்பட்ட ஒவ்வொரு மனிதரும், அவர் எந்த இடத்தையும், எந்த மதத்தையும் சார்ந்தவராக இருந்தாலும், அவர் நம் உடன்பிறந்தவர். அனைவருக்கும், குறிப்பாக, ஏழை, நோயாளி, ஓரங்கட்டப்பட்டவர், ஆதரவற்றவர் என உதவிகள் அதிகம் தேவைப்படும் எல்லாருக்கும் எவ்வித வேறுபாடும் இன்றி கடவுள் தமது இரக்கமுள்ள கரத்தை நீட்டுவதுபோன்று, ஒவ்வொருவரும் சலுகையோடு நோக்கப்பட வேண்டும்.

வாழ்வு ஆபத்தில் இருக்கும் இடத்தில் நாம் அதை அதிகமாகப் பாதுகாக்க வேண்டும். வன்முறையோ, மரணமோ எதுவாயினும், அன்பின் மற்றும் வாழ்வின் கடவுள் முன்னிலையில் அது இறுதிமுடிவைக் கொண்டுள்ளது. ஐரோப்பாவில், புனித பூமியில், மத்திய கிழக்கில், ஆப்ரிக்காவில், உலகில் எந்த இடத்திலும் அமைதி, ஒப்புரவு, மன்னிப்பு மற்றும் வாழ்வின் நியதிகளை நாம் நடைமுறைப்படுத்த உதவுமாறு கடவுளிடம் வலியுறுத்திச் செபிக்க வேண்டும் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் உரோம் யூதமதத் தொழுகைக் கூடத்தில் இஞ்ஞாயிறன்று கூறினார். அன்பு நெஞ்சங்களே, சிரியாவில் ஐந்தாண்டுகளாகத் தொடர்ந்து இடம்பெறும் சண்டையில், அப்பாவி மக்கள், மரணத்தைவிட மோசமான ஒரு வாழ்வை வாழ்கின்றனர் என்று சொல்லப்படுகின்றது. அந்நாட்டின் Deir al-Zour நகரின் புறநகர்ப் பகுதியிலிருந்து ஐ.எஸ். இஸ்லாமிய அரசின் தீவிரவாதிகள் 400க்கும் அதிகமானவர்களை கடத்தியுள்ளனர். அரசின் கட்டுப்பாட்டுப் பகுதிகள் மீது ஐ.எஸ். தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் குறைந்தது 135 பேர் கொல்லப்பட்டுள்ளனர். கொல்லப்பட்ட அல்லது கடத்தப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் அரச ஆதரவுப் படையினரின் உறவினர்கள் என்று சிரியாவின் அரசு ஊடகம், இஞ்ஞாயிறன்று செய்தி வெளியிட்டுள்ளது. இவர்கள் தலைவெட்டப்படோ அல்லது சிலுவையில் அறையப்பட்டோ கொல்லப்பட்டுள்ளனர் எனவும் அரச ஊடகம் தெரிவித்துள்ளது. கடத்தப்பட்டவர்கள், Raqqaவிலுள்ள ஐ.எஸ்.அமைப்பின் தலைமையகத்துக்கு கொண்டு செல்லப்பட்டிருக்கலாம் என சிரிய மனித உரிமைகள் அமைப்பு கூறுகிறது. சுன்னி இஸ்லாம் பிரிவைச் சேர்ந்த ஐ.எஸ். அமைப்பு, தனது கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில், ஷியா இஸ்லாம் பிரிவு மற்றும் முஸ்லிம் அல்லாத மக்களைத் துன்புறுத்தி வருகிறது. சிரியா அரசுக்கு எதிராகப் போராட்டங்கள் தொடங்கியதிலிருந்து, இதுவரை 2 இலட்சத்து 50 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் இறந்துள்ளனர், ஒரு கோடியே பத்து இலட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் கட்டாயமாக தங்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர்.

இது மட்டுமல்ல, கடந்த வாரத்தில் இந்தோனேசியத் தலைநகர் ஜகார்த்தாவில் குண்டுவெடித்ததில் பலர் இறந்தனர். அதோடு, புர்க்கினோ ஃபாசோ தலைநகர் Ouagadougouவில் இடம்பெற்ற கடும் பயங்கரவாதத் தாக்குதலில் 29க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர், பலர் படுகாயம் அடைந்தனர். மேலும், மலேசியாவில் தற்கொலைத் தாக்குதலுக்கான திட்டம் உள்ளது என்று சந்தேகிக்கப்படுகிறது. இப்படிப்பட்ட செய்திகளையே நாம் ஒவ்வொரு நாளும் கேட்க வேண்டியிருக்கிறது. இப்படி அடிக்கடி வன்முறைகள், மனித உயிரிழப்புக்கள் பற்றி நாம் கேட்கும்போது, கடந்த காலத்திலிருந்து, இன்றைய மனித சமுதாயம், இன்னும் பாடம் கற்கவில்லையே என்று மனது ஆதங்கப்படுகிறது.

இதற்கிடையே, சனவரி 16ம் நாளன்று, ஐ.நா. பொதுச் செயலர் பான் கி மூன் அவர்கள், பயங்கரவாத வன்முறை பரவாமல் தடுப்பதற்கான புதிய செயல்திட்டத்தினை வெளியிட்டுள்ளார். ஐ.நா. பொது அவையில் இதனை வெளியிட்டு பேசிய அவர், பாதுகாப்பை அதிகரிப்பது, பதிலடி தருவது என்பதோடு, பயங்கரவாதக் குழுக்களில் இளையோர் சேருவதைத் தடுக்கும் வகையில் ஒருங்கிணைந்த செயல்திட்டமாக இது இருக்கும் என குறிப்பிட்டுள்ளார். எழுபது பரிந்துரைகளைக் கொண்ட இந்த செயல்திட்டத்தை உறுப்பு நாடுகள் அனைத்தும் பின்பற்ற வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார். சட்டப்படி இயங்கும் சிறப்பான ஆட்சி, அனைவருக்குமான அரசியல் பங்கேற்பு, தரமான கல்வி, கண்ணியமான வேலைவாய்ப்பு, மனித உரிமைகளுக்கு மதிப்பளிப்பது ஆகிய அம்சங்களை இந்த செயல்திட்டம் கொண்டிருப்பதாக பான் கி மூன் தெரிவித்தார். போகோ ஹராம் உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகள் மனித உரிமைகளை துச்சமாக மதிப்பதாகக் குறிப்பிட்ட அவர், பயங்கரவாத நடவடிக்கைகளால் உலக அளவில் முஸ்லிம்களே அதிக அளவில் பாதிக்கப்படுவதாகவும் வேதனை தெரிவித்தார். அன்பு நேயர்களே, இந்த உலகம் எத்தனை சிறிய, பெரிய போர்களைக் கண்டிருக்கின்றது. வரலாற்றுப் பக்கங்களைப் புரட்டினால் ஆக்கங்களைவிட அழிவுகளே அதிகம். ஆனால் மனிதர் கடந்த கால அனுபவங்களிலிருந்து இன்னும் பாடம் கற்கவில்லை. நாடுகளுக்கு மட்டுமல்ல, நம் தனிப்பட்ட வாழ்விலும், குடும்ப வாழ்விலும் கடந்த காலத்தில் எத்தனையோ நேர்மறையான மற்றும் எதிர்மறையான அனுபவங்கள் நமக்குக் கிடைக்கின்றன. அவற்றிலிருந்து நாம் நிகழ்காலத்திற்கும், வருங்காலத்திற்கும் பாடம் கற்றுள்ளோமா... நிகழ்காலத்தை எப்படி அமைக்கின்றோமோ அதைப் பொருத்துத்தான் வருங்காலம் அமையும். நம் வருங்காலம் மிளிர வேண்டுமானால் நம் நிகழ்காலம் ஒளிர வேண்டும். இந்த இரு காலங்களும் மின்ன வேண்டுமெனில் வருங்கால அனுபவம் பாடமாக அமைய வேண்டும்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.