2016-01-18 15:56:00

வத்திக்கான் பாதுகாப்புப் பணியாளரின் பணி மதிப்புமிக்கது


சன.18,2016. இரக்கத்தின் யூபிலி ஆண்டு, நம் அனைவருக்கும் ஆழமான உள்ளுணர்வையும், கடவுளோடும் பிறரோடும் ஒப்புரவையும் ஏற்படுத்தும் காலம் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வத்திக்கான் பாதுகாப்புப் பணியாளர்களிடம் கூறினார்.

புதிய ஆண்டை முன்னிட்டு வத்திக்கான் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளவர்களை, இத்திங்களன்று திருப்பீடத்தில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்த யூபிலி ஆண்டில் உரோம் நகருக்கு ஏராளமான திருப்பயணிகள் வரவிருப்பதால், இப்பணியாளர்களின் பணி மிகவும் மதிப்புமிக்கது என்றும், இவர்களின் பணிக்கு நன்றி என்றும் கூறினார்.

குழந்தை இயேசுவில் வானகத் தந்தையின் இரக்க முகத்தைத் தியானித்தோம், அன்பிலும், மன்னிப்பிலும் வாழ நாம் அழைக்கப்படுவதையும் உணர்ந்தோம் என்றுரைத்த திருத்தந்தை, இந்த மீட்பு நிகழ்வு, நமக்கு வழங்கும் அருளின் கொடைகளை வரும் நாள்களில் வாழ்வோம் என்றும் கேட்டுக்கொண்டார்.

மேலும், அனைத்துலக நிதியத்தின் பொது இயக்குனர் Christine Lagarde, Monaco இளவரசர் 2ம் ஆல்பர்ட், இளவரசி Charlene, இன்னும் சில திருஅவைத் தலைவர்களையும் இத்திங்களன்று திருப்பீடத்தில் சந்தித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.