2016-01-18 16:07:00

பிடிவாதக் கிறிஸ்தவர்கள், சிலைகளை வழிபடுபவர்கள்


சன.18,2016. “அந்த வழியில் அது செய்யப்பட்டிருக்க வேண்டும்” என்று சொல்லி, பிடிவாதமாக அதிலேயே தேங்கி நிற்கும் கிறிஸ்தவர்கள், தூய ஆவியாரின் விந்தைகளுக்கு இதயங்களை மூடிக்கொண்டிருப்பவர்கள் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இத்திங்கள் திருப்பலி மறையுரையில் கூறினார்.

சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் இத்திங்கள் காலை நிறைவேற்றியத் திருப்பலியில், இந்நாளின் முதல் வாசகம்(1சாமு.15:16-23) மற்றும் நற்செய்தி வாசகத்தை(மாற்கு 2:18-22) மையமாக வைத்து மறையுரைச் சிந்தனைகளை பகிர்ந்துகொண்ட திருத்தந்தை, தூய ஆவியாரின் விந்தைகளுக்கு இதயங்களை மூடிக்கொண்டிருக்கும் கிறிஸ்தவர்கள், சிலைகளை வழிபடுபவர்கள் மற்றும் புரட்சி செய்பவர்கள் என்று கூறினார்.

இஸ்ரயேலின் முதல் அரசர் சவுல், கடவுளின் விருப்பத்திற்குச் செவிசாய்க்காமல், மக்களின் விருப்பத்திற்குச் செவிசாய்த்ததால் அவர், இஸ்ரயேலின் அரசராக, கடவுளால் புறக்கணிக்கப்பட்டதையும், போரில் வெற்றியடைந்த பின்னர் மக்கள் சிறந்த விலங்குகளைப் பலிசெய்ய விரும்பினர், ஆனால் கடவுள் அதை விரும்பவில்லை என்று இறைவாக்கினர் சாமுவேல் அரசர் சவுலைச் சாடினார் என்றும் கூறினார் திருத்தந்தை.

ஆண்டவருக்கு மகிழ்ச்சி தருவது எரிபலிகள் அல்ல, ஆனால் அவர் குரலுக்குச் செவிமடுப்பது என்று சாமுவேல் சவுலிடம் கூறினார், இதேபோல் நற்செய்தியில், இயேசுவும், எவரும் பழைய ஆடையில் புதிய துணியை ஒட்டுப்போடுவதில்லை எனப் போதித்தார் என்று விளக்கினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

சட்டம் மனிதருக்காக உள்ளது, மனிதர் கடவுளின் பணிக்காக இருக்கிறார், எனவே மனிதர் திறந்த இதயத்தை எப்போதும் கொண்டிருக்க வேண்டும் என்றும் கூறிய திருத்தந்தை, தூய ஆவியார் முழு உண்மையை நோக்கி நம்மை வழிநடத்துவார் என்றும் தன் மறையுரையில் கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.