2016-01-16 14:54:00

முன்னறிவிப்பின்றி முதியோரைச் சந்திக்கச் சென்ற திருத்தந்தை


சன.,16,2016. இரக்கத்தின் யூபிலி ஆண்டின் ஒரு நடவடிக்கையாக இவ்வெள்ளியன்று மாலை, உரோம் நகரின் புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ள முதியோர் இல்லம் ஒன்றை, எவ்வித முன்னறிவிப்புமின்றி சென்று சந்தித்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த சிறப்பு யூபிலி ஆண்டில், மாதத்திற்கு ஒரு முறையாகிலும், இரக்கத்தின் வெளிப்படையான, எடுத்துக்காட்டான ஒரு நடவடிக்கையை மேற்கொள்ள உள்ளதாக திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஏற்கனவே அறிவித்துள்ளபடி, உரோம் நகரின் புறநகர்ப் பகுதியிலுள்ள புருனோ போஸ்சி முதியோர் இல்லத்திற்கு, திடீரென சென்று, அங்குள்ள 33 வயாதானவர்களை தனித்தனியாக சந்தித்து, அவர்கள் விருப்பப்படி ஒவ்வொருவருடனும் தனித்தனியாக புகைப்படங்கள் எடுத்துக் கொண்டதுடன், அவர்களுடன் அமர்ந்து உரையாடினார்.

முதியோர்களை சந்தித்தப்பின், அதே பகுதியில் உள்ள  Iride என்ற நோயாளிகள் இல்லத்திற்கும் சென்றார். படுத்த படுக்கையாக செயலற்ற நிலையில் இருக்கும் 6 நோயாளிகளையும் அவர்களைக் கவனித்துக்கொள்ளும் உறவினர்களையும் சந்தித்து ஆறுதல் கூறினார் திருத்தந்தை. 

இரக்கத்தின் எடுத்துக்காட்டாக, எவ்வித முன்னறிவிப்புமின்றி இடம்பெற்ற இந்த இரு இல்ல சந்திப்புகள் குறித்து அங்கு வசிக்கும் முதியோரும், நோயாளிகளும், அவர்களின் உறவினர்களும் மிகவும் மகிழ்ச்சியடைந்ததாக செய்தி நிறுவனங்கள் கருத்துத் தெரிவிக்கின்றன. 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.