2016-01-16 14:41:00

இது இரக்கத்தின் காலம் - இயேசுவின் தாயும் அங்கு இருந்தார்...


தை மாதத்தில், பல குடும்பங்களில், திருமணங்கள் நடைபெறும். இச்சூழலில், இயேசுவும், அன்னை மரியாவும் கலந்துகொண்ட ஒரு திருமணத்தைப் பற்றி (யோவான் நற்செய்தி 2: 1-12) சிந்திக்க, நமக்கொரு வாய்ப்பு. இந்த நற்செய்தியின் ஆரம்ப வரிகள் நம் கவனத்தைக் கட்டிப்போடுகின்றன:

மூன்றாம் நாள் கலிலேயாவில் உள்ள கானாவில் திருமணம் ஒன்று நடைபெற்றது. இயேசுவின் தாயும் அங்கு இருந்தார். - யோவான் 2: 1

இயேசுவின் தாய் அங்கு ‘இருந்தார்’ என்று சொல்லும்போது, திருமணத்திற்கு முன்பே அவர் அங்கு சென்றிருக்கக்கூடும் என்ற கோணத்தில் சிந்திக்கலாம்.

ஒரு குடும்பத்தில் திருமணம் என்றால், மிக மிக நெருங்கியவர்கள், ஒரு சில நாட்களுக்கு முன்னரே அங்கு சென்று, திருமண ஏற்பாடுகளில் கலந்து கொள்வார்கள். ஊரில் திருமணம் என்றால், சில தாராள மனம் கொண்ட நல்ல உள்ளங்கள், சொந்தம், சொந்தமில்லை என்பதையோ, அழைப்பு வந்தது, வரவில்லை என்பதையோ, கொஞ்சமும் சிந்திக்காமல், அந்த வீடுகளுக்கு உரிமையுடன் சென்று, வேலைகளை இழுத்து போட்டுக்கொண்டு செய்வதைப் பார்த்திருக்கிறோம். இவர்களில் பலர், திருமணங்கள் முடிந்ததும், எவ்வித ஆர்ப்பாட்டமும் இல்லாமல் அந்த இடத்தை விட்டு வெளியேறுவதையும் பார்த்திருக்கிறோம். ஒரு நல்ல காரியம், மிக நல்ல முறையில் நடைபெற வேண்டும் என்ற ஒரே ஒரு நோக்கத்துடன், வேறு எந்த உள்நோக்கமும் இல்லாமல் செயல்படும் இந்த அன்பு உள்ளங்கள், உலகின் பல சிற்றூர்களில் இன்றும் நடமாடுகிறார்கள்.

நடமாடும் இத்தகையப் புதுமைகளின் முன்னோடியாக, நம் அன்னை மரியா கானா திருமண வீட்டில் ‘இருந்தார்’. அன்னை மரியாவின் அழகே இதுதான். எங்கெல்லாம் அவரது உதவி தேவை என்று உணர்கிறாரோ, அங்கெல்லாம், எவ்வித அழைப்பும் இல்லாமல் சென்று உதவுவார். தன் உறவினரான எலிசபெத்தைப் பற்றி வானதூதர் சொன்னதும், மரியா கிளம்பிச் சென்றது நமக்கு நினைவிருக்கும். நடமாடும் புதுமைகளை நன்றியுடன் எண்ணிப்பார்க்க, இரக்கத்தின் யூபிலி நல்லதொரு தருணம்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.