2016-01-16 14:59:00

அறிவு, இதயம், கரங்கள் மூன்றையும் இணைப்பதே கல்வி- திருத்தந்தை


சன.16,2016. கல்வி என்பது, அறிவு, இதயம், கரங்கள் என்ற மூன்றையும் இணைத்து வழிநடத்தும் முயற்சியாக இருக்கவேண்டும் என்ற கருத்தை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஒரு காணொளிச் செய்தியாக வெளியிட்டுள்ளார்.

சனவரி 13ம் தேதி முதல், 15ம் தேதி முடிய பிரேசில் நாட்டின் ரியோ தெ ஜனெய்ரோ நகரில் நடைபெற்ற 24வது அமெரிக்க கத்தோலிக்கக் கல்வி மாநாட்டிற்கு, திருத்தந்தை அனுப்பியக் காணொளிச் செய்தியில் இவ்வாறு கூறினார்.

இன்றைய உலகில் வழங்கப்படும் கல்வியின் மையமாக மனிதர்கள் விளங்குவதில்லை; மாறாக, அறிவு சார்ந்த சில கருத்துக்களே மையமாக அமைந்துள்ளன என்று தன் செய்தியில் குறிப்பிட்டுள்ளார், திருத்தந்தை.

ஒருவர் மற்றவர் மீது அச்சத்தை வளர்க்கும் வகையில் இவ்வுலகம் பரப்பி வரும் கருத்துக்களுக்கு மாற்றாக, சந்திக்கும் கலாச்சாரத்தை வளர்க்கும் முயற்சிகளை, கல்வியாளர்கள் மேற்கொள்ளவேண்டும் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் காணொளிச் செய்தியில் விண்ணப்பித்தார்.

சட்டத் திட்டங்கள், ஒழுங்கு முறைகள் ஆகியவற்றையே இன்றைய உலகில் கல்வி நிலையங்கள் வளர்த்து வருகின்றன என்று சுட்டிக்காட்டியத் திருத்தந்தை, கத்தோலிக்கக் கல்வி, இயேசு வழங்கிய 'பேறுபெற்றோர்' விழுமியங்களையும், இறுதித் தீர்ப்பு (மத்தேயு 25) கட்டளைகளையும் வலியுறுத்தவேண்டும் என்று கேட்டுக் கொண்டார். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.