2016-01-15 15:50:00

புனித பூமி கிறிஸ்தவர்களிடம் ஆயர்கள்: நீங்கள் மறக்கப்படவில்லை


சன.15,2016. அரசியல், சமூக மற்றும் பொருளாதார நெருக்கடிகளை மிகக் கடுமையாக எதிர்நோக்கும் கிறிஸ்துவின் நிலமான புனித பூமிக் கிறிஸ்தவர்கள் மறக்கப்படவில்லை என்ற ஆறுதல்தரும் செய்தியை வெளியிட்டுள்ளது, ஆயர்கள் குழு ஒன்று.

புனித பூமி கிறிஸ்தவர்களிடம் தங்களின் ஒருமைப்பாட்டுணர்வைத் தெரிவிக்கும் விதமாக, ஒவ்வோர் ஆண்டும் சனவரி மாதத்தில், வட அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் தென்னாப்ரிக்க ஆயர்கள் பிரிதிநிதிகள் குழு ஒன்று, தனது வழக்கமான திருப்பயணத்தை தற்போது முடித்து செய்தி ஒன்றையும் வெளியிட்டுள்ளது.

இத்திருப்பயணம் குறித்து வத்திக்கான் வானொலிக்குப் பேட்டியளித்த, இந்த ஆயர்கள் குழுவில் ஒருவரான, பிரிட்டனின் Clifton மறைமாவட்ட ஆயர் Declan Lang அவர்கள், மற்றவர்களால் அடிக்கடி மறக்கப்படும் மக்களைச் சந்திப்பதற்காகத் தாங்கள் இத்திருப்பயணத்தை மேற்கொண்டதாகக் கூறினார்.

Cremisan பள்ளத்தாக்கில் வாழும் மக்களையும், ஜோர்டனில் வாழும் ஈராக் புலம்பெயர்ந்த மக்களையும், Gazaவில் வாழும் மக்களையும் சந்தித்தது முக்கியத்துவம் வாய்ந்தது என்றும் கூறினார் ஆயர் Lang.

புனித பூமிக் கிறிஸ்தவர்களோடு செபித்து, அவர்களுடன் எங்களின் ஒருமைப்பாட்டுணர்வைத் தெரிவித்தோம் என்றும், எங்கள் நாடுகளின் அரசுகளிடம் இம்மக்களின் நிலைகள் குறித்து எடுத்துச் சொல்வோம் என்றும் கூறினார் ஆயர் Lang.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.