2016-01-15 15:29:00

பயங்கரவாதச் செயல்களின் பயத்தால் ஆட்கொள்ளப்பட்டுவிடக் கூடாது


சன.15,2016. பயங்கரவாதச் செயல்கள் இடம்பெறக் கூடும் என்ற அச்சத்தால் நாம் முடங்கிப்போய்விடக் கூடாது என்று திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள் கூறினார்.

கடந்த டிசம்பர் 8ம் தேதி தொடங்கிய இரக்கத்தின் யூபிலி ஆண்டில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு குறித்து Vida Nueva என்ற இஸ்பானிய இதழுக்குப் பேட்டியளித்த கர்தினால் பரோலின் அவர்கள், துன்பம் நிறைந்த நேரங்களில் எதார்த்தவாதிகளாக நாம் இருக்க வேண்டும் என்று கூறினார்.

எந்தத் தாக்குதலையும் தடுப்பதற்கு இத்தாலிய அதிகாரிகள் தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள் என்பதில் தான் உறுதியாய் இருப்பதாகவும், பயங்கரவாதிகள் என்ன விரும்புகிறார்கள் என்ற அச்சத்தில் நாம் மூழ்கியிருக்கத் தேவையில்லை என்றும் கூறினார் கர்தினால் பரோலின் .

ஐ.எஸ். இஸ்லாமிய அரசு, உலகின் அமைதி மற்றும் உறுதியான நிலைக்கு அச்சுறுத்தலாக உள்ளது, எனவே, நாம் அனைத்துலகச் சட்டத்தின் அடிப்படையில், குறிப்பாக, ஐ.நா. பாதுகாப்பு அவையின் விதிமுறைகளுக்கு உட்பட்டு, இவ்வரசுக்கு எதிராகப் போராட வேண்டும் என்றும் கூறினார் கர்தினால் பரோலின்.

இஸ்லாம் மதத்தின் பெயரால் நடத்தப்படும் பயங்கரவாதத் தாக்குதல்களை முஸ்லிம் தலைவர்கள் ஒரே மனதாக கண்டிக்கின்றனர், இதில் பலியாவோரில் பெரும்பாலானவர்கள் முஸ்லிம்கள் என்பதையும் சுட்டிக்காட்டினார், திருப்பீடச் செயலர் கர்தினால் பரோலின்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.