2016-01-15 15:28:00

நேபாள நிலநடுக்கத்தால் இமயமலை உயரம் குறைந்தது


சன.15,2016. கடந்த 2015ம் ஆண்டு நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்துக்குப் பிறகு, இமயமலையின் உயரம் 60 செ.மீ. குறைந்துள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. எனினும், 8,848 மீட்டர் உயரமுள்ள உலகின் மிக உயரமான சிகரமான எவரெஸ்ட், பாதிப்புக்கு உள்ளான பகுதியிலிருந்து வெகுதொலைவில் இருந்ததால் பாதிக்கப்படவில்லை என்று அந்த ஆய்வு கூறுகிறது.

கடந்த 2015ம் ஆண்டு ஏப்ரலில் நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் ஏறக்குறைய 8,000 பேர் உயிரிழந்தனர். இந்த நிலநடுக்கம் காரணமாக இமயமலை 60 செ.மீ. வரை உயரம் குறைந்துள்ளதாக, அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக ஆய்வாளர் ஜான் இலியட் தலைமையிலான ஆய்வாளர்கள் இந்த ஆய்வை மேற்கொண்டனர். நிலநடுக்கப் பகுதியிலிருந்து கிழக்கே 50 கி.மீட்டருக்கும் அதிகமான தூரத்தில் உள்ள சிகரமான எவரெஸ்ட், தணிந்த பகுதியிலிருந்து வெகுதொலைவில் அமைந்துள்ளது என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். 

ஆதாரம் : தி இந்து / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.