2016-01-15 15:45:00

குண்டுவெடிப்பு தாக்குதலுக்கு ஜகார்த்தா திருஅவை கடும் கண்டனம்


சன.15,2016. இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் இடம்பெற்ற குண்டுவெடிப்புத் தாக்குதலுக்குத் தனது வன்மையான கண்டனத்தை வெளியிட்டுள்ளது ஜகார்த்தா உயர்மறைமாவட்டம்.

ஜகார்த்தாவின் மத்திய பகுதியிலுள்ள பெரிய அங்காடிக்கு வெளியே இவ்வியாழனன்று நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு மற்றும் குண்டு வெடிப்பில் குறைந்தது ஏழு பேர் இறந்துள்ளனர்.

இத்தாக்குதல்கள் குறித்து தனது கவலையை வெளியிட்டுள்ள, ஜகார்த்தா உயர்மறைமாவட்ட சமூக அமைப்பின் தலைவர் Veronica Wiwiek Sulistyo அவர்கள், மனித சமுதாயத்தைப் புறக்கணித்து, இந்தோனேசிய மக்கள் மத்தியில் கடும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ள இந்நடவடிக்கையை, கடுமையாகக் கண்டிப்பதாகத் தெரிவித்துள்ளார்.

மேலும், இது குறித்து தனது கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ள ஐ.நா. பொதுச் செயலர் பான் கி மூன் அவர்கள், இவ்வன்முறையை எக்காரணத்தைக் கொண்டும் நியாயப்படுத்த முடியாது என்று கூறியுள்ளார்.

இதற்கிடையே, ஐ.எஸ். இஸ்லாமிய அரசின் குழு ஒன்று, இத்தாக்குதலை நடத்தியதாக அறிவித்துள்ளது. தென்கிழக்கு ஆசியாவில் ஐ.எஸ். இஸ்லாமிய அரசின் பலம் வலுத்து வருவதையே இது காட்டுகின்றது என்று கூறப்படுகின்றது. 

ஆதாரம் : UCAN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.