2016-01-15 15:38:00

இந்தியாவின் உதவியுடன் உலகின் பசியை அகற்ற ஐ.நா. முயற்சி


சன.15,2016. 2030ம் ஆண்டுக்குள் உலக அளவில் பசியை அகற்றுவதற்கு இந்தியாவின் பங்கு முக்கியமாக உணரப்படும்வேளை, இந்தியாவில் சத்துள்ள உணவை ஊக்குவிப்பதற்கு அரசையும், தொழில் துறைகளையும் அணுகியுள்ளது ஐ.நா.வின் WFP உணவு திட்ட நிறுவனம்.  

130 கோடி மக்களைக் கொண்டுள்ள இந்தியா, உலகில் மக்கள்தொகை அதிகமாகவுள்ள இரண்டாவது நாடாக இருக்கும்வேளை, 2030ம் ஆண்டில் உலகில் பசிக்கொடுமையை முற்றிலும் அகற்றுவதற்கு இந்தியாவின் பங்கு முக்கியமானது என்று, WFP நிறுவனம் கூறியுள்ளது.

இந்தியாவுக்கு மூன்று நாள் சுற்றுப்பயணத்தை மேற்கொண்ட WFP நிறுவன இயக்குனர் Ertharin Cousin அவர்கள், ஐ.நா.வின் 193 நாடுகளும் ஒரே மனதாக ஏற்றுக்கொண்ட 2030ம் ஆண்டின் முக்கிய வளர்ச்சித் திட்ட இலக்குகளில் உலகின் பசியை முழுவதுமாக அகற்றுவதும் ஒன்று என்பதைக் குறிப்பிட்டார்.

இந்தியாவில் சத்துணவை ஊக்குவிக்கும் நடவடிக்கைகள் தொடர்பாக, நுகர்வோர் அமைப்பு, உணவு அமைச்சகம் மற்றும் பொது விநியோகம் ஆகியவற்றுக்குப் பொறுப்பான அரசு அமைப்புகளுடன் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளார் ஐ.நா. அதிகாரி Cousin. 

ஆதாரம் : UN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.