2016-01-14 15:58:00

வறியோர், வீடற்றோர், கைதிகளுக்கு இலவச சர்க்கஸ் காட்சி


சன.14,2016. ரோனி ரோலர் (Rony Roller) என்ற ஒரு சர்க்கஸ் நிறுவனம், உரோம் நகரில் தற்போது நடத்திவரும் சர்க்கஸ் காட்சிகளில், இவ்வியாழன் மாலைக் காட்சியை, வறியோர், வீடற்றோர், புலம் பெயர்ந்தோர் மற்றும் சில கைதிகள் ஆகியோருக்கு இலவசமாக வழங்கியது.

2000 பேர் அமர்ந்து காணக்கூடிய இந்த சர்க்கஸ் அரங்கத்தில் வியாழனன்று நடைபெற்ற காட்சி முழுமையும் காணும் வாய்ப்பு வறியோருக்கென தனிப்பட்ட முறையில் வழங்கப்பட்டது.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் பெயரால் இயங்கிவரும் தர்மச் செயல்களின் ஒரு அங்கமாக வழங்கப்பட்டுள்ள இந்த இலவசக் காட்சி,  வீடற்ற ஓர் இஸ்பானியக் கலைஞர், திருத்தந்தைக்கென உருவாக்கிய ஒரு பாடலுடன் துவங்கியது.

கடந்த ஆண்டு, சனவரி மாதம், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வழங்கிய புதன் மறைக்கல்வி உரையின்போது, அவர் முன்னிலையில் சர்க்கஸ் குழுவினர் தங்கள் சாகசங்களைச் செய்த வேளையில், அக்கலைஞர்கள் தங்கள் திறமையால் வெளிப்படுத்தும் அழகு, இவ்வுலகிற்கு மிகவும் அவசியம் என்று திருத்தந்தை கூறியது குறிப்பிடத்தக்கது.

தங்கள் விடாமுயற்சியாலும், பயிற்சிகளாலும் திறமைகளை வளர்த்துக்கொள்ளும் கலைஞர்கள், வறுமையால் மனம் தளர்ந்துள்ள மக்களுக்கு உந்து சக்தியாக இருக்கின்றனர் என்று திருத்தந்தை கூறியதை மனதில் கொண்டு, சர்க்கஸ் கலைஞர்கள் ஓர் இலவசக் காட்சியை வறியோருக்கென அர்ப்பணித்துள்ளனர் என்று திருத்தந்தையின் தர்மச் செயல் அமைப்பு கூறியுள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.