2016-01-14 15:55:00

புலம்பெயர்ந்தோர் உலக நாளையொட்டி, அயர்லாந்து ஆயர்கள் செய்தி


சன.14,2016. போர், பட்டினி, அடக்குமுறை ஆகியக் கொடுமைகளால் தங்கள் சொந்த நாட்டை விட்டு வெளியேறும் புலம்பெயர்ந்தோரின் பிரச்சனை, இன்றும், இனி வரும் நாட்களிலும் நாம் சந்திக்கவேண்டிய ஒரு பெரும் சவால் என்று அயர்லாந்து ஆயர்கள் கூறியுள்ளனர்.

சனவரி 17, வருகிற ஞாயிறன்று கடைபிடிக்கப்படும் குடிபெயர்ந்தோர் மற்றும் புலம்பெயர்ந்தோர் 102வது உலக நாளையொட்டி, அயர்லாந்து ஆயர்கள் சார்பில், "விருந்தோம்பல் நமது கடமை" என்ற தலைப்பில் ஆயர் ஜான் பக்லி (John Buckley) அவர்கள் இச்செய்தியை வெளியிட்டுள்ளார்.

அயர்லாந்து ஆயர் பேரவையின் புலம்பெயர்ந்தோர் பணிக்குழுவின் தலைவரான ஆயர் பக்லி அவர்கள் வெளியிட்டுள்ள இச்செய்தியில், அயர்லாந்து மக்கள், புலம் பெயர்ந்தோராய், இங்கிலாந்திலும், அமெரிக்க ஐக்கிய நாட்டிலும் பட்ட துயரங்களை நினைவு கூறவேண்டும் என்று கூறியுள்ளார்.

அயர்லாந்தின் காவலராகக் கொண்டாடப்படும் புனித பேட்ரிக், ஓர் அடிமையாக, புலம்பெயர்ந்தோராக, மனித வர்த்தகத்தில் விற்கப்பட்டவராக வாழ்ந்ததையும், அயர்லாந்து மக்கள் நினைவில் கொள்ளவேண்டும் என்று ஆயரின் செய்தி வலியுறுத்தியுள்ளது.

தற்போது ஐரோப்பிய கண்டத்தை அடைந்துள்ள மத்தியக் கிழக்குப் பகுதி மக்களை வரவேற்று, வாழ்வளிப்பது ஒவ்வொரு ஐரோப்பிய கிறிஸ்தவரின் கடமை என்று ஆயர் பக்லியின் செய்தி கூறுகிறது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.