2016-01-14 15:41:00

நம்பிக்கை எப்போதும் வெல்கிறது – திருத்தந்தையின் மறையுரை


சன.14,2016. நம்பிக்கை எப்போதும் வெல்கிறது; ஏனெனில் அது, தோல்வியையும் வெற்றியாக மாற்றுகிறது, ஆயினும், அது மந்திரச் சக்தி அல்ல, மாறாக, இறைவனுடன் கொள்ளும் உள்ளார்ந்த உறவு என்ற கருத்துக்களை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் மறையுரையாகப் பகிர்ந்துகொண்டார்.

சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் இவ்வியாழன் காலை ஆற்றியத் திருப்பலியில், சாமுவேல் முதல் நூலிலிருந்து (1 சாமு. 4: 1-11) எடுக்கப்பட்டப் பகுதியில் தன் மறையுரையின் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்ட திருத்தந்தை, இஸ்ரயேல் மக்கள், உடன்படிக்கைப் பேழையை, ஒரு மந்திரப் பொருளாகப் பயன்படுத்தியதைச் சுட்டிக்காட்டினார்.

உடன்படிக்கை என்பது, இறைவனுடன் இஸ்ரயேல் மக்கள் கொண்ட உறவு என்பதை அம்மக்கள் மறந்து, அவ்வுறவிலிருந்து விலகிச் சென்றபின், பேழையை இறைவனின் மந்திரச் சக்தி நிறைந்த பொருளாகப் பயன்படுத்தினர் என்றும், அதனால், பெலிஸ்தியரிடம் தோல்வி அடைந்தனர் என்றும் திருத்தந்தை எடுத்துரைத்தார்.

இறைவனை விட்டு விலகிச் சென்ற இஸ்ரயேல் மக்களுக்கு, முற்றிலும் மாறாக, இறைவனை நாடி வந்த தொழுநோயாளர் வெற்றி பெற்றார் என்று திருத்தந்தை தன் மறையுரையில் சுட்டிக்காட்டினார்.

"நீர் விரும்பினால் எனது நோயை நீக்க உம்மால் முடியும்" என்ற மன்றாட்டுடன், இயேசுவைத் தொழுத தொழுநோயாளர், அதுவரை, தன் வாழ்வில் அடைந்திருந்த தோல்விக்கு, இயேசுவின் தொடுதலால், இரண்டே நிமிடங்களில் வெற்றி காண்கிறார் என்று கூறியத் திருத்தந்தை, நமது நம்பிக்கை எப்போதும் வெற்றி பெறும் என்று வலியுறுத்தினார்.

தன் மகனைக் குணமாக்க இயேசுவைத் தேடி வந்த ஒரு தந்தை, "நான் நம்புகிறேன், என் நம்பிக்கையின்மை நீங்க உதவும்" என்று வேண்டிக்கொண்டதுபோல், நாமும் வேண்டிக்கொள்வோம் என்ற ஒரு வேண்டுதலுடன், திருத்தந்தை, தன் மறையுரையை நிறைவு செய்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.