2016-01-14 15:12:00

இது இரக்கத்தின் காலம்– மாண்பின் பொருளை உணர்த்திய ஏழைத் தாய்


ஒரு சமயம், ஆர்ஜென்டீனா நாட்டில் ஒரு பங்குக் குரு, ஓர் இளம் ஏழைத் தாயை அவரின் சிறு குழந்தைகளுடன் சந்தித்தார். கணவரால் கைவிடப்பட்ட அத்தாய்க்கு நிரந்தரமாக எந்த வேலையும் கிடையாது. சிறு சிறு வேலைகள் கிடைப்பதுகூட அரிதாக இருந்தது. எனவே, அத்தாய், தனது பிள்ளைகளுக்கு உணவளித்து, குடும்பத்தின் மற்ற தேவைகளை நிறைவேற்றுவதற்கு பாலியல் தொழிலிலும் ஈடுபட்டு வந்தார். இத்தாயின் நிலைமையை அறிந்த அந்தப் பங்குக் குரு, அத்தாய்க்கு, உணவுப் பொருள்களையும் மற்ற பொருளாதார உதவிகளையும் தனது பங்கின் வழியாகச் செய்து வந்தார். பங்கு மையத்திற்கும் அத்தாய் அவ்வப்போது வருவது உண்டு. ஒரு கிறிஸ்மஸ் காலத்தில் ஒருநாள் அத்தாய், அந்தப் பங்குக் குருவை நேரில் பார்ப்பதற்கு அனுமதி கேட்டார். பங்கு மையம் ஆற்றிவரும் உதவிகளுக்கு நன்றி சொல்லத்தான் அத்தாய் தன்னைப் பார்க்க வருகிறார் என்று நினைத்த பங்குக் குரு, தன்னைச் சந்திக்க வந்த அத்தாயிடம், Señora(அம்மா), உதவிகள் எல்லாம் தவறாமல் கிடைக்கின்றனவா? என்று கேட்டார். ஆமாம், ஆமாம். சுவாமி, அவற்றிற்கு நன்றி, ஆனால், நீங்கள் என்னைப் பார்க்கும்போதெல்லாம் Señora(அம்மா) என்று அழைப்பீர்கள், இப்படி அழைப்பதை நீங்கள் ஒருபோதும் நிறுத்தியதே கிடையாது, அதற்கு நன்றி சொல்லவே இன்று இங்கு வந்தேன் என்று சொன்னார் அத்தாய். அருள்பணி Jorge Bergoglio அவர்கள்தான் இந்தப் பங்குக் குரு. இவர்தான் நம் திருத்தந்தை பிரான்சிஸ். இந்த நிகழ்வை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இறைவனின் பெயர் இரக்கம் என்ற தனது நூலில் பகிர்ந்து கொண்டுள்ளார். திருத்தந்தை சொல்கிறார்-ஒவ்வொரு மனிதரும், அவர்களின் வாழ்வு எந்நிலையில் இருந்தாலும், அவர்கள் மாண்புடனும், கருணையுடனும் நடத்தப்பட வேண்டியதன் முக்கியத்துவத்தை இந்த இளம் தாய் தனக்கு உணர்த்தினார் என்று. இரக்கத்தின் காலம், இது ஏழை எளியவர்களை, பாவிகளை மாண்புடன் நடத்த வலியுறுத்துகின்றது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.