2016-01-13 16:10:00

திருத்தந்தையை ஒரு நண்பராக வரவேற்கக் காத்திருக்கிறோம்- ரபி


சன.13,2015. உரோம் நகரில் அமைந்துள்ள யூதத் தொழுகைக் கூடத்திற்கு வருகை தரும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை, ஒரு நண்பராக வரவேற்கக் காத்திருக்கிறோம் என்று, தொழுகைக் கூடத்தின் தலைமை ரபி, Riccardo Di Segni அவர்கள் கூறினார்.

வருகிற ஞாயிறு பிற்பகல் யூதத் தொழுகைக் கூடத்திற்கு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் செல்லும் நிகழ்வு குறித்து, வத்திக்கான் வானொலிக்கு பேட்டியளித்த தலைமை ரபி, Di Segni அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தலைமைப் பொறுப்பேற்ற உடனேயே அவருக்கு இந்த அழைப்பு விடப்பட்டது என்பதைச் சுட்டிக்காட்டினார்.

திருத்தந்தையர் 2ம் ஜான் பால், 16ம் பெனடிக்ட் ஆகியோரைத் தொடர்ந்து, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தங்கள் தொழுகைக் கூடத்திற்கு வருகை தரும் மூன்றாவது திருத்தந்தை என்பதை மகிழ்வுடன் எடுத்துரைத்த ரபி Di Segni அவர்கள், இச்சந்திப்பில் கலந்துகொள்ள, ஐரோப்பாவின் பல்வேறு நாடுகளிலிருந்து தலைமை ரபிகள் வரவிருப்பதையும் எடுத்துரைத்தார்.

யூத மதத் தலைவர்கள், அறிஞர்கள் பலருடன் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கொண்டுள்ள நல்லுறவை தன் பேட்டியில் நினைவுகூர்ந்த ரபி Di Segni அவர்கள், புனித பூமியில் திருத்தந்தை மேற்கொண்ட ஒப்புரவு முயற்சிகளையும் சிறப்பாகக் குறிப்பிட்டார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.