2016-01-13 16:10:00

அரசுத் தலைவர் பாரக் ஒபாமா உரையில் இடம்பெற்ற திருத்தந்தை


சன.13,2015. கொடுங்கோலர்கள், கொலையாளிகள் ஆகியோர் கடைபிடிக்கும் வெறுப்பையும் வன்முறையையும் நாமும் பின்பற்றுவது, அவர்களைப்போல் நம்மை மாற்றிவிடும் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இதே இடத்தில் நின்று பேசினார் என அமெரிக்க ஐக்கிய நாட்டு அரசுத் தலைவர், பாரக் ஒபாமா அவர்கள், சனவரி 12, இச்செவ்வாயன்று உரையாற்றினார்.

அமெரிக்க ஐக்கிய நாட்டின் இணைந்த காங்கிரஸ் அவை உறுப்பினர்களுக்கு முன், இச்செவ்வாய் மாலை தன் இறுதி அதிகாரப்பூர்வ உரையை வழங்கிய அரசுத் தலைவர் பாரக் ஒபாமா அவர்கள், தான் நின்று உரையாற்றும் அதே இடத்தில், 2015ம் ஆண்டு செப்டம்பர் 24ம் தேதி திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் உரையாற்றினார் என்று கூறி, திருத்தந்தை ஆற்றிய உரையின் சில வரிகளை நினைவுகூர்ந்தார்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அடிக்கடி பேசிவரும் ஒரு கருத்தான புலம் பெயர்ந்தோர் பிரச்சனையை தன் உரையில் குறிப்பிட்டுப் பேசிய அரசுத் தலைவர் பாரக் ஒபாமா அவர்கள், தன் பதவிக் காலத்தின் இறுதி ஆண்டில், இப்பிரச்சனை குறித்து நிரந்தரத் தீர்வு காண தான் முயற்சி செய்வதாக எடுத்துரைத்தார்.

அமெரிக்க ஐக்கிய நாட்டில் எவ்வித ஆவணங்களும் இன்றி தற்போது வாழ்ந்துவரும் ஒரு கோடிக்கும் அதிகமான குடியேற்றதாரர்கள் சார்பில், அமெரிக்க ஆயர்கள் பேரவை அரசுக்கு விண்ணப்பித்து வருவது குறிப்பிடத் தக்கது.

ஆதாரம் : Agencies / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.