2016-01-12 16:24:00

செபம், திருஅவையின் வாழ்வுக்கு உண்மையான உந்து சக்தி


சன.12,2016. செபம் வியத்தகு வேலைகளைச் செய்கின்றது மற்றும் பக்தியை மறந்து இதயம் கடினமடைவதைத் தடுக்கின்றது என்று, சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் இச்செவ்வாயன்று நிறைவேற்றிய திருப்பலியில் கூறினார்  திருத்தந்தை பிரான்சிஸ்.

விசுவாசிகளின் செபம் திருஅவையை மாற்றுகின்றது, திருத்தந்தையர், ஆயர்கள், அருள்பணியாளர்கள், அருள்சகோதரிகள்  ஆகிய நாம் திருஅவையை முன்னோக்கி நடத்தவில்லை, ஆனால் அவ்வேலையை புனிதர்கள் செய்கின்றார்கள் என்றும் திருப்பலி மறையுரையில் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆலயத்தில் கடவுளிடம் குழந்தை வரம் கேட்டுப் புலம்பி கண்ணீர் சிந்திய அன்னா என்ற பெண், மது மயக்கத்தில் இவ்வாறு புலம்புகிறார் என்று அன்னாவை ஆலயக்குரு ஏலி, தவறாகக் கணித்தது பற்றிய இத்திருப்பலியின் முதல் வாசகத்தை(1சாமு.1:9-20) மையப்படுத்தி மறையுரையாற்றினார் திருத்தந்தை.

செபம் அற்புதங்களை ஆற்றுகின்றது, தங்களின் பக்தியை இழந்த கிறிஸ்தவர்களுக்கும், பொதுநிலையினரானாலும் சரி, ஆயர்கள், அருள்பணியாளர்களானாலும் சரி எல்லாருக்கும் செபம் புதுமைகளை நிகழ்த்துகின்றது என்றும் கூறினார் திருத்தந்தை.  

நீதியின் சாம்பலில் பக்தி உணர்வை இழக்கிறோம், எனவே நாம் விசுவாச மனிதர்களாக மாற வேண்டும் என்றுரைத்த திருத்தந்தை, அன்னா, தனது இதயத்தில் செபித்தார், அவரின் உதடுகள் மட்டுமே அசைந்தன, துயரத்தோடு, கண்ணீரோடு ஆண்டவரிடம் வரம் கேட்பது, விசுவாச மனிதரின் துணிச்சலைக் காட்டுகின்றது என்றும் கூறினார்.

புனிதர்கள், கடவுளால் அனைத்தையும் ஆற்ற இயலும் என்று நம்புவதற்குத் துணிச்சலைக் கொண்டிருந்தவர்கள் என்று கூறிய திருத்தந்தை, ஆண்டவரே, செபத்தில் நம்பிக்கை வைப்பதற்கு எங்களுக்கு வரம் தாரும் என்று செபித்து மறையுரையை நிறைவு செய்தார்.

மேலும், நாம் ஆண்டவரிடம் நம்மையே அர்ப்பணிக்கும்போது, நம் வாழ்வுப் பாதையில் நாம் சந்திக்கும் அனைத்து இடர்களையும் நம்மால் மேற்கொள்ள முடியும் என்பது  திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் டுவிட்டர் செய்தியாக இச்செவ்வாயன்று வெளியிடப்பட்டுள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.