2016-01-12 14:44:00

இது இரக்கத்தின் காலம் : அகக்கண்கள் காணும் அற்புத உண்மைகள்


La Croix என்ற பிரெஞ்ச் இதழில் ஓர் இளம்பெண்ணைக் குறித்து வெளியாகியிருந்த உண்மை நிகழ்வுகளின் சுருக்கம்...

ஆப்ரிக்காவின் காங்கோ குடியரசில், ஓர் எளியக் குடும்பத்தில், கடைசிக் குழந்தையாகப் பிறந்தவர் இரேச்சல் (Rachel Mwanza). அவருக்கு 8 வயதானபோது, வாழ்க்கை தடம் புரண்டது. இரேச்சலின் தந்தை, தன் மனைவியையும், மூன்று குழந்தைகளையும் அவர்கள் பிறந்து வளர்ந்த ஊரிலிருந்து, Kinshasa நகருக்கு அனுப்பிவைத்தார். விரைவில் அவர்களுடன் தானும் சேர்வதாகக் கூறியத் தந்தை, அத்துடன் அவர்கள் வாழ்விலிருந்து முற்றிலும் மறைந்தார். Kinshasaவில் அத்தாயும், குழந்தைகளும், வயதான தங்கள் பாட்டியோடு அடுக்கடுக்காய் துன்பங்களைச் சந்தித்தனர்.

அக்குடும்பத்தின் துன்பங்களுக்கு, கடைசியாகப் பிறந்த இரேச்சல்தான் காரணம் என்று, அந்நகரில் இருந்த ஒரு போலிச்சாமியார் கூறினார். அக்குழந்தை ஒரு சூனியக்காரி என்றும், அவரைப் பிடித்துள்ள பேயை ஓட்டிவிட்டால் எல்லாம் சரியாகிவிடும் என்றும் கூறினார். இரேச்சலின் பாட்டி, குழந்தைப் பருவத்திலிருந்தே இரேச்சலை வெறுத்தவர். எனவே, போலிச்சாமியார் இவ்விதம் சொன்னதும், பேய்பிடித்த அக்குழந்தையைத் தண்டிக்க, சிறுமியின் கண்களில் மிளகாய்ப் பொடியைப் போட்டுத் தேய்த்தார், பாட்டி. அப்போது இரேச்சலுக்கு வயது பத்து. இதைத் தொடர்ந்து, இரேச்சல் தன் வீட்டைவிட்டு ஓடிவிட்டார்.

அடுத்த 7 ஆண்டுகள், சிறுமி இரேச்சல், வெளி உலகிலும் ஏராளமான கொடுமைகளைச் சந்தித்தார். வாழ்வின் போராட்டங்களை நம்பிக்கையுடன் எதிர்கொண்டு, இன்று இளையோரின் எடுத்துக்காட்டாக வாழ்கிறார், இரேச்சல். தன் துன்பங்களைக் கேட்டு மக்கள் கண்ணீர் விடவேண்டும் என்பது தன் நோக்கமல்ல, மாறாக, இத்தகையத் துன்பங்களைச் சந்திக்கும் ஏனைய ஆப்ரிக்கக் குழந்தைகளை எண்ணி, அவர்கள் வாழ்வில் மாற்றங்களைக் கொணர்வதற்காகவே தான் வாழ்வில் அடைந்த துயரங்களையும் அவற்றை தான் எதிர்கொண்ட வழிகளையும், உலகின் பல அரங்குகளில் பேசி வருவதாக இரேச்சல் குறிப்பிட்டுள்ளார்.

அவர், ஒரு பேட்டியில் தன் பாட்டியைப்பற்றி கூறியுள்ள கருத்து உன்னதமானது. இரேச்சலின் கண்களில் மிளகாய்ப் பொடியைத் தேய்த்த பாட்டியின்மீது அவர் கோபமாய் இருக்கிறாரா என்று பேட்டியில் கேட்டபோது, அவர், ‘நான் ஏன் கோபப்படவேண்டும்? அதனால் என்ன பயன்?’ என்று பதில் சொன்னார்.

முகக் கண்களில் வேதனையை அனுபவித்தாலும், அகக் கண்களால் அற்புதமான உண்மைகளைக் காணமுடியும். இது, இளம்பெண் இரேச்சல் சொல்லித்தரும் பாடம்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.