2016-01-11 15:52:00

திருமுழுக்குக்கு தினமும் சாட்சியாக வாழ திருத்தந்தை அழைப்பு


சன.11,2016. ஆண்டவரின் திருமுழுக்குப் பெருவிழாவான இஞ்ஞாயிறு நண்பகலில், வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான மக்களுக்கு மூவேளை செப உரையும் வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஒவ்வொரு விசுவாசியும் தான் பெற்ற திருமுழுக்குக்கு ஒவ்வொரு நாளும் சாட்சியாக வாழ வேண்டுமென்று கேட்டுக்கொண்டார்.

திருமுழுக்கு அருளடையாளம், வாழ்வில் ஒரேயொருமுறைதான் பெறப்படுகிறது, இது, பகிர்ந்து கொள்ளப்பட வேண்டிய புதிய வாழ்வாக இருப்பதால், ஒவ்வொரு நாளும், இதற்குச் சாட்சியாக வாழ வேண்டும் என்று கூறினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

மனிதமற்றச் சூழல்களில் வாழ்வோர், மற்றும் இருள் நிறைந்தப் பாதைகளில் நடப்பவர்களுக்கு இப்புதிய வாழ்வைப் பகிர்ந்து கொள்ளவும், இப்புதிய ஒளியை வழங்கவும் விசுவாசிகள் அழைக்கப்பட்டுள்ளனர் என்றும் கூறினார் திருத்தந்தை.

இஞ்ஞாயிறு காலை திருப்பலியில் 26 குழந்தைகளுக்கு திருமுழுக்கு அருளடையாளத்தை நிறைவேற்றிய பின்னர், நண்பகலில் மூவேளை செப உரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வருள் அடையாளத்தை அண்மையில் பெற்றுள்ளக் குழந்தைகளுக்கும், அதனைப் பெற்றுள்ள மற்றும் அதற்காகத் தயாரித்து வரும் இளவயதினர், வயதுவந்தோர்க்கும் சிறப்பு ஆசிரை வழங்குவதாகக் கூறினார்.

திருமுழுக்கின் பொருள் மற்றும் அதைப் பெற்றுள்ளவர்களின் கடமைகள் குறித்து மூவேளை செப உரையில் விளக்கியத் திருத்தந்தை, ஒவ்வொருவரும் தாங்கள் திருமுழுக்குப் பெற்ற தேதியைப் பார்க்குமாறும், இத்தேதியே, கிறிஸ்தவர்களாக வாழ்வதற்கும், திருஅவை மற்றும் புதிய மனித சமுதாயத்தின் உறுப்பினர்களாவதற்கும் நம்மை அர்ப்பணித்த நாள், இயேசுவோடு நம்மை இணைத்துக்கொண்ட நாள் என்று எடுத்துரைத்தார்.

திருமுழுக்கு நாளில் முதல் முறையாக நாம் தூய ஆவியாரைப் பெறுகிறோம், அவர் நம் இதயங்களை முழு உண்மைக்குத் திறக்கிறார், வாழ்வின் இன்னலான பாதையிலும், பிறரோடு அன்பு மற்றும் ஒருமைப்பாட்டின் மகிழ்வுப் பாதையிலும் நம்மை வழிநடத்துகிறார், தூய ஆவியார், கடவுளின் மன்னிப்பின் கனிவை வழங்குகிறார், தூய ஆவியாரை ஏற்றுக் கொள்கிறவர்களுக்கு அவர் வாழ்வளிக்கும் பிரசன்னமாக இருக்கிறார் என்பதை மறக்க வேண்டாமெனக் கேட்டுக்கொண்டார், திருத்தந்தை பிரான்சிஸ். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.