2016-01-11 16:06:00

உலக குடிபெயர்ந்தவர் நாள்-பிரித்தானிய ஆயரின் செய்தி


சன.11,2016. அடுத்த சில ஆண்டுகளில் இருபதாயிரம் சிரியா நாட்டு புலம்பெயர்ந்த மக்களை குடியமர்த்த முயற்சிக்கும் பிரித்தானிய அரசுடன் சேர்ந்து உழைப்பதற்கு அந்நாட்டுத் திருஅவை முன்னுரிமை கொடுக்கின்றது என்று, பிரித்தானிய ஆயர் பேரவையின் குடிபெயர்ந்தவர் ஆணைக்குழுத் தலைவர் ஆயர் Patrick Lynch அவர்கள் கூறினார்.

இம்மாதம் 17ம் தேதி கடைப்பிடிக்கப்படும் உலக குடிபெயர்ந்தவர் நாளுக்கென செய்தி வெளியிட்டுள்ள, Southwark துணை ஆயர் Patrick Lynch அவர்கள், இந்த உலக நாளுக்கு திருத்தந்தை வெளியிட்டுள்ள செய்தியின் முக்கிய கூறுகளையும் சுட்டிக் காட்டியுள்ளார்.

இரக்கத்தின் நற்செய்தி வழியாக குடிபெயர்ந்தவர் பிரச்சனைக்குத் தீர்வு காணுமாறு திருத்தந்தை அழைப்பு விடுத்துள்ளார் என்றும், இந்த அழைப்பு, குடிபெயர்ந்த மக்களின் துன்பங்களை உணர்ந்து, அவர்களின் மாண்பையும் உரிமைகளையும் மதிப்பதற்கு வலியுறுத்துகின்றது என்றும் ஆயரின் செய்தி கூறுகிறது. 

Calaisலுள்ள குடிபெயர்ந்த மக்களின் பிரச்சனைக்கு, பிரான்சும் பிரித்தானியாவும் இணைந்து தீர்வு காணுமாறு ஆயர் தனது செய்தியில் கேட்டுக்கொண்டுள்ளார்.

ஆதாரம் : ICN/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.