2016-01-11 15:24:00

இது இரக்கத்தின் காலம் – மனிதரில் உயர்வு தாழ்வு இல்லையே


ஒரு சமயம், சுவாமி விவேகானந்தர் அவர்கள், ஓர் ஊரில் மூன்று நாள்கள் இரவும் பகலும் ஒரு விநாடிகூட ஓய்வே இல்லாமல் மக்களைச் சந்தித்து வந்தார். மூன்றாம் நாள் இரவு அவர் மட்டும் தனியாக இருந்த நேரத்தில், செருப்புத் தைக்கும் தலித் தொழிலாளி ஒருவர் அவரிடம் சென்று, சுவாமிஜி! நீங்கள் மூன்று நாள்களாக உணவு, தூக்கம் எதுவுமே இல்லாமல் பேசிக்கொண்டிருந்ததை நான் கவனித்தேன். பசியும் களைப்பும் உங்களுக்கும் இருக்கத்தானே செய்யும்! மூன்று நாள்களாக ஒரு டம்ளர் தண்ணீர்கூட நீங்கள் குடிக்கவில்லையே! என்று பரிவுடன் கூறினார். அப்போது சுவாமிஜி அவரிடம், சாப்பிடுவதற்கு நீ எனக்கு ஏதாவது தருகிறாயா? என்று கேட்டார். அதற்கு அவர், நான் தாழ்ந்த சாதியைச் சேர்ந்தவன்; நான் சப்பாத்தி செய்து உங்களுக்குத் தர முடியாது. கோதுமை மாவும் மற்ற பொருள்களும் உங்களுக்குக் கொண்டுவந்து தருகிறேன். நீங்களே சமைத்துச் சாப்பிடுங்கள் என்று கேட்டுக்கொண்டார். காரணம், தாழ்ந்த சாதியைச் சேர்ந்த ஒருவர் ஒரு துறவிக்கு உணவளித்தது மற்றவர்களுக்குத் தெரிந்தால் தண்டிக்கப்படுவார். ஏன், அவரை நாடு கடத்தவும் செய்வார்கள். ஆனாலும்,  அத்தொழிலாளியைச் சமாதானப்படுத்தி, அவர் சமைத்துக் கொண்டுவந்த உணவைப் சாப்பிட்டார் சுவாமிஜி. இது பற்றி அறிந்த உயர் சாதியினர் சிலர் வெகுண்டெழுந்தனர். சுவாமிஜி அவர்களிடம், நீங்கள் என்னை மூன்று நாள்கள் தொடர்ந்து பேச வைத்தீர்கள்! இடையில் நான் ஏதாவது சாப்பிட்டேனா, ஓய்வெடுத்தேனா என்று ஒருமுறைகூட நீங்கள் யாரும் கவலைப்படவில்லை. நீங்கள் பெரிய மனிதர்கள், உயர்ந்த சாதியினர்! ஆனால் இங்கே பாருங்கள், தனக்குத் தண்டனை கிடைக்கும் என்று தெரிந்திருந்தும், மனிதநேயம் என்ற ஒரே காரணத்தால் அவர் எனக்கு உணவு தந்தார். அவரைத் தாழ்ந்த சாதியைச் சேர்ந்தவர் என்று நீங்கள் ஒதுக்குகிறீர்களே! இது உங்களுக்கு வெட்கமாக இல்லையா? என்று கேட்டார். இரக்கத்தின் காலம் மனிதநேயத்திற்கு அழைப்பு விடுக்கின்றது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.