2016-01-11 15:58:00

36,000 ஆண்டுகளுக்கு முன்னர் வரையப்பட்ட குகை ஓவியங்கள்


சன.11,2016. எரிமலை வெடித்த குகைகளுக்குள் 36,000 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த பழங்கால மனிதர்கள் வரைந்த அற்புதமான ஓவியங்களை பிரான்ஸ் தொல்பொருள் துறை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

தென் கிழக்கு பிரான்ஸில் உள்ள Ardeche பகுதியில் Chauvet என்ற பழங்கால குகைகளை ஆய்வாளர்கள் கடந்த 1994ம் ஆண்டு கண்டுபிடித்தனர்.

ஏறக்குறைய 40,000 ஆண்டுகளுக்கு முன்னதாக இப்பகுதியில் உள்ள ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட எரிமலைகள் வெடித்திருக்க வேண்டும். இதனை இந்த சுற்றுப்பகுதியில் வாழ்ந்த பழங்கால மக்கள் கண்டுபிடித்திருக்கலாம் என கூறப்படுகிறது.

மேலும், பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக பழங்கால மனிதர்கள் இதுபோன்ற குகைகளில் தங்கியுள்ளனர். அப்போது, அவர்கள் தினமும் பார்க்கும் விலங்குகளை அங்குள்ள சுவற்களில் வரைந்து வருவது அவர்களின் பொழுது போக்காகும்.

இவ்வாறு நீளமான தந்தங்கள் உடைய யானைகள், புலிகள், சிங்கம், குரங்கு உள்ளிட்ட விலங்குகளின் உருவங்களை ஓவியமாக வரைந்துள்ளனர்.

அதே சமயம், இந்த குகைப்பகுதியில் எரிமலை வெடித்ததற்கான அடையாளங்களும் அப்படியே உள்ளன.

வரலாற்று சிறப்பு வாய்ந்த இந்தக் கண்டுபிடிப்புகளை பாதுகாக்க பிரான்ஸ் ஆய்வாளர்கள் குகைகளுக்கு அருகிலேயே ஒரு மிகப்பெரிய தொல்பொருள் ஆய்வு மையம் ஒன்றை கட்டி முடித்துள்ளனர்.

ஏறக்குறைய ஐந்து கோடி யூரோ செலவில் முடிக்கப்பட்டுள்ள இந்த மையம் வருகின்ற ஏப்ரல் 10ம் தேதி பொதுமக்களின் பார்வைக்கு திறந்து வைக்கப்படும் என்றும், உலகம் முழுவதிலிருந்து ஏறக்குறைய மூன்று இலட்சத்திலிருந்து நான்கு இலட்சம் வரை சுற்றுலாப் பயணிகள் இந்த குகை ஓவியங்களை கண்டு களிப்பார்கள் என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆதாரம் : தமிழ்வின்/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.