2016-01-09 15:24:00

தொழுநோயாளர்க்கு உதவும் இத்தாலிய அருள்சகோதரிக்கு விசா மறுப்பு


சன.09,2016. இந்தியாவில் கடந்த நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக தொழுநோயாளர் மத்தியில் பணியாற்றிவரும் இத்தாலிய அருள்சகோதரி ஒருவருக்கு, நாட்டில் தொடர்ந்து தங்குவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது என்று ஊடகச் செய்திகள் கூறுகின்றன.

அமலமரி மறைப்பணியாளர் சபையைச் சார்ந்த இத்தாலிய அருள்சகோதரி Bertilla Capra அவர்களுக்கு, கடந்த நவம்பரில் தங்கும் அனுமதி காலாவதியாகிவிட்ட நிலையில், அதைப் புதுப்பிப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டு வருவதாக, செய்திகள் கூறுகின்றன.

1970ம் ஆண்டில் இந்தியாவுக்கு வந்த அருள்சகோதரி Capra அவர்கள், 2010ம் ஆண்டுவரை ஒவ்வொரு ஐந்து ஆண்டுக்கு ஒருமுறை தங்கும் அனுமதியைப் புதுப்பித்து வந்தார். அதற்குப் பிறகு, அரசு விதித்துள்ள புதிய விதிமுறைகளின்படி, அச்சகோதரி தனது தங்கும் அனுமதியை ஒவ்வோர் ஆண்டும் புதுப்பிக்க வேண்டியிருந்தது. தற்போது அதைப் புதுப்பிக்க அனுமதி மறுக்கப்பட்டு அவர் நாட்டைவிட்டு வெளியேற வேண்டும் என்று இருமுறை அரசிடமிருந்து செய்தியைப் பெற்றுள்ளார் என்று கூறப்பட்டுள்ளது.

மும்பையிலுள்ள விமலா தோல் அழற்சி மையத்தில் இயக்குனராகப் பணியாற்றிவரும் அருள்சகோதரி Capra அவர்கள், இந்த மையம் மற்றும் மக்களிடம், தான் மிகுந்த பற்று கொண்டிருப்பதாகவும், வேறொரு நாட்டில் வேறொரு பணியில் ஈடுபடுவதற்குத் தனக்கு வாய்ப்புகள் கிடைக்காது எனவும் கூறியுள்ளார்.

ஆதாரம் : UCAN/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.