2016-01-09 15:10:00

திருத்தந்தையின் மெக்சிகோ திருத்தூதுப்பயணத்தில் வியப்புகள்


சன.09,2016. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மெக்சிகோ மக்களின் வாழ்வைப் பகிர்ந்து கொள்ளவும், குவாதாலூப்பே அன்னை மரியாவிடம் மிக நெருக்கமாக இருக்கவும் ஆவல் கொண்டுள்ளார் என்று, மெக்சிகோ நாட்டுக்கான திருப்பீடத் தூதர் பேராயர் Christophe Pierre அவர்கள் கூறினார்.

வருகிற பிப்ரவரி 12ம் தேதி முதல் 17ம் தேதி வரை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மெக்சிகோவுக்குத் திருத்தூதுப் பயணம் மேற்கொள்ளவிருப்பதை முன்னிட்டு, மெக்சிகோ வானொலிக்குப் பேட்டியளித்த பேராயர் Pierre அவர்கள், இத்திருத்தூதுப் பயணத்தில் சில வியப்புகள் இருக்கக்கூடும் என்று கூறினார்.

இத்திருத்தூதுப் பயணம், அனைத்து மெக்சிகோ மக்களையும் பாதித்துள்ள பிரச்சனைகளைத் தீர்ப்பதாக அல்லாமல், மக்களின் வாழ்வை எளிதாக்குவதாக அமையும் என்றும் பேராயர் Pierre அவர்கள் கூறினார்.

மெக்சிகோ மக்களைப் பற்றி திருத்தந்தை நன்கு அறிந்திருக்கிறார், திருத்தந்தையின் சந்திப்புகள், எளிமையாகவும், நேர்மையானதாகவும் இருக்கும், நிச்சயமாக திருத்தந்தை, நாங்கள் எதிர்பார்த்திராத சில வியப்புகளைக் கொடுப்பார் என்றும் கூறினார் பேராயர் Pierre. மெக்சிகோ நகருக்கு வடமேற்கேயுள்ள குன்று ஒன்றில், புனித ஹூவான் தியேகோ என்ற ஏழை விவசாயிக்கு 1531ம் ஆண்டில் விண்ணக அன்னை பலமுறை காட்சி கொடுத்தார். இதிலிருந்தே குவாதாலூப்பே அன்னை மரியா பக்தி ஆரம்பமானது. இவ்வன்னையின் திருவுருவம் பதிந்த புனித ஹூவான் தியேகோ அவர்களின் மேலாடையும், அந்த உருவமும் 470 ஆண்டுகளுக்கு மேலாக பாதுகாக்கப்பட்டு வருகிறது. 

ஆதாரம் : Zenit /வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.