2016-01-09 15:12:00

கட்டைவிரல் அச்சுக்களால் பள்ளி மாணவர்கள் தேசியக்கொடி


சன.09,2016. தமிழகத்தின் சத்தியமங்கலம் சாரு மெட்ரிக் பள்ளியைச் சேர்ந்த 766 மாணவர்கள் தங்களது கட்டைவிரல் அச்சுக்களைக் கொண்டு தேசியக் கொடியை உருவாக்கி இவ்வெள்ளிக்கிழமை கின்னஸ் சாதனை படைத்துள்ளனர்.

இந்தியாவின் 67வது குடியரசு தின விழாவையொட்டி பள்ளி வளாகத்தில் உலகிலேயே அதிகமான மாணவர்கள் ஒரே சமயத்தில் கைவிரல் அச்சுக்களைக் கொண்டு தேசியக் கொடி உருவாக்கும் நிகழ்ச்சி இவ்வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

உலக சாதனை நிகழ்ச்சிகளை ஆய்வு செய்து அங்கீகாரம் வழங்கும் சிங்கப்பூர் ஏசியன் ரெக்கார்ட்ஸ் அகாடமியின் இந்திய ஆய்வு அதிகாரி ஏ.கே.செந்தில்குமார், இந்தியன் ரெக்கார்ட்ஸ் அகாடமி நிறுவன ஆய்வாளர் பி.ஜெகநாதன் ஆகியோர் முன்னிலையில் இந்த உலக சாதனை நிகழ்ச்சி நடைபெற்றது.

இப்பள்ளியைச் சேர்ந்த 766 மாணவர்கள் ஒன்றாகச் சேர்ந்து அவர்களது கைவிரல் அச்சுக்களை கொண்டு 1.45 மணி நேரத்தில் 758 தேசிய கொடிகளை உருவாக்கினர்.

இத்தேசியக் கொடியானது 1 மீட்டர் நீளமும் 0.66 மீட்டர் அகலமும் கொண்டதாக இருந்தது. இதற்காக 1 மீட்டர் நீளமுள்ள 758 துணிகளும், ஆரஞ்சு, பச்சை, நீலம் மற்றும் வெள்ளை வண்ண 2,300 லிட்டர் எமல்ஷன் பெயிண்டும் பயன்படுத்தப்பட்டன.

உலக சாதனை விதிகளின்படி செயல்பட்டு உலகிலேயே அதிகமான நபர்கள் ஒரே சமயத்தில் கைவிரல் அச்சுக்களைக்கொண்டு தேசியக் கொடியை உருவாக்கியதாக அறிவிக்கப்பட்டது.

ஆதாரம் : தி இந்து/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.