2016-01-08 14:39:00

கடவுளன்பை ஏற்பது, நம் பாவங்களை அற்றுப்போகச் செய்யும்


சன.08,2016. கடவுளின் அன்பைத் தழுவிக்கொள்வது, நம் பாவங்கள் எவ்வளவாக இருந்தாலும், அவை அனைத்தையும் அற்றுப்போகச் செய்யும் சக்தியை கொண்டிருக்கின்றது என்று இவ்வெள்ளி காலைத் திருப்பலி மறையுரையில் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

அனைத்து அன்பும் கடவுளிடமிருந்து வருபவை அல்ல, ஏனென்றால் கடவுளே உண்மையான அன்பு என்றுரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நாம் பாவிகள் என்பது கடவுளுக்கு ஒரு பொருட்டல்ல, ஆனால் அவர் அன்பு கூர்கிறார், அவர் எப்போதும் நம்மை முதலில் அன்பு கூர்கிறார் என்றும் கூறினார்.

இவ்வெள்ளி  காலையில், சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் நிறைவேற்றிய திருப்பலியின் முதல் வாசகமான, திருத்தூதர் யோவான்(1யோவா.5,5-13) அவர்களின் முதல் திருமுகத்திலிருந்து தனது மறையுரைச் சிந்தனைகளை வழங்கினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

அன்பு என்ற சொல்லின் பல்வேறு அர்த்தங்கள் பற்றியும், கிறிஸ்தவ வாழ்வுக்கு மிகவும்  முக்கியமான கடவுளன்பு, பிறரன்பு ஆகிய இரு கட்டளைகள் குறித்தும் மறையுரையாற்றினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

அன்பு என்ற சொல் அடிக்கடி பயன்படுத்தப்படுகிறது, ஆனால் அதைப் பயன்படுத்தும்போது, உண்மையிலேயே அதற்கு அர்த்தம் என்னவென்று நாம் அறிவதில்லை, உண்மையில் அன்பு என்றால் என்ன, உண்மையான அன்பு எங்கே வெளிப்படுகின்றது என்ற கேள்விகளையும் தன் மறையுரையில் எழுப்பினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஒவ்வோர் அன்பும், கடவுள் என்று சொல்லாமல், கடவுளே அன்பு என்று சொல்லுமாறு கூறிய திருத்தந்தை, கடவுள் நம்மை முதலில் அன்பு கூர்கிறார் என்பதற்கு நற்செய்தியில் பல எடுத்துக்காட்டுக்கள் உள்ளன என்றும் கூறினார்.

நம் மனதில் எதையோ வைத்திருக்கும்போது கடவுளிடம் மன்னிப்புக் கேட்பதற்கு நாம் விரும்புகிறோம், ஆனால் நம்மை மன்னிப்பதற்கு கடவுள் நமக்காகக் காத்திருக்கிறார், மகளே, மகனே நான் உன்னை அன்பு கூர்கிறேன் என்று சொல்வதற்கு, நம்மை அணைத்துக் கொள்வதற்கு, நம் ஒவ்வொருவருக்காகவும் காத்திருக்கிறார் என்றும் கூறினார் திருத்தந்தை.

நாம் ஆண்டவரிடம் சென்று, ஆண்டவரே, நான் உம்மை எவ்வளவு அன்பு கூர்கிறேன் என்று உமக்குத் தெரியும், ஆயினும் நான் மோசமான பாவி என்று சொல்ல வேண்டும், கடவுளும், காணாமல்போய் திரும்பி வந்த மகனிடம் தந்தை செய்தது போன்று, நாம் சொல்வதை முடிக்க விடாமல், தமது அன்பால் நம்மை அமைதிப்படுத்துகிறார் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.