2016-01-08 15:26:00

ஆயுதப் பரவலைக் கட்டுப்படுத்தும் முயற்சிக்கு ஆயர்கள் ஆதரவு


சன.08,2016. அமெரிக்க ஐக்கிய நாட்டில் ஆயுதப் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு, அரசுத்தலைவர் பாரக் ஒபாமா அவர்கள் எடுத்துள்ள நடவடிக்கைகளுக்கு அந்நாட்டு ஆயர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

அரசுத்தலைவர் ஒபாமா அவர்களின் இந்நடவடிக்கையை வரவேற்று தனது blogல் செய்தி வெளியிட்டுள்ள டல்லஸ் மறைமாவட்ட ஆயர் Kevin Joseph Farrell அவர்கள்,  துப்பாக்கிக் கட்டுப்பாடு குறித்த வெட்கத்துக்குரிய சட்டங்களில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்வதற்கு, தற்போது ஒரு மனிதருக்காவது துணிச்சல் வந்துள்ளதற்கு இறைவனுக்கு நன்றி கூறுகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

துப்பாக்கி கண்காட்சிகள் மற்றும் இணையத்தில் துப்பாக்கிகளை விற்பதற்கு தற்போது விதிவிலக்கு பெற்றுள்ளவர்கள் உட்பட, துப்பாக்கி விற்பனையாளர்கள் அனைவரும், துப்பாக்கி வாங்குபவர் குறித்த விபரங்களை அறிந்திருக்க வேண்டும், துப்பாக்கிகள் வாங்குவதற்குத் தகுதியற்றவர்கள் பற்றிய விபரங்களை மாநிலங்கள் வழங்கும் என்று,   அரசுத்தலைவர் ஒபாமா அவர்கள் சனவரி 5, கடந்த செவ்வாயன்று அறிவித்துள்ளார்.

அமெரிக்க ஐக்கிய நாட்டில், துப்பாக்கியால் இடம்பெறும் வன்முறையை ஒழிப்பதற்கென எடுக்கப்பட்டுள்ள இந்நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவித்துள்ள ஆயர் Farrell அவர்கள், பொது இடங்களில் ஆயுதங்கள் கண்காட்சிக்கு வைக்கப்படுவது இதனால் தடை செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், இது குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்க ஆயர் பேரவையின் நீதி மற்றும் மனித வளர்ச்சி ஆணைக்குழுத் தலைவர் Miami பேராயர் Thomas Wenski அவர்கள், அமெரிக்காவில் துப்பாக்கி வன்முறையை ஒழிப்பதற்கு உதவும் அறிவுப்பூர்வமான கொள்கைகள் எடுக்கப்படுமாறு ஆயர்கள் நீண்ட காலமாக வலியுறுத்தி வருகின்றனர்,   அரசுத்தலைவர் ஒபாமா அவர்களின் இந்த அறிவிப்பை காங்கிரஸ் அவை தீவிரமாகச் செயல்படுத்தும் என்று நம்புவதாகத் தெரிவித்தார்.

அமெரிக்காவில் ஒவ்வோர் ஆண்டும் துப்பாக்கி தொடர்புடைய முப்பதாயிரம் இறப்புகள் இடம்பெறுகின்றன.

ஆதாரம் : Fides/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.