2016-01-07 16:26:00

பிலிப்பின்ஸ் நாட்டில் இயேசு சபை மறைசாட்சி


சன.07,2015. பிலிப்பின்ஸ் நாட்டில் பணியாற்றி, மறைசாட்சியாக இறந்த இயேசு சபை அருள் பணியாளர் ஒருவரை புனிதராக்கும் வழிமுறைகளை, அந்நாட்டின் தலத்திருஅவை சனவரி 6, இப்புதனன்று அதிகாரப்பூர்வமாகத் துவங்கியுள்ளது.

இயேசு சபை அருள் பணியாளர் பிரான்செஸ்கோ பல்லியோலா (Francesco Palliola) அவர்கள், 1600களில், பிலிப்பின்ஸ் நாட்டின் மிந்தனாவோ பகுதியில் பணியாற்றி, மறைசாட்சியாகக் கொல்லப்பட்டார்.

அவரை, புனிதராக உயர்த்தும் முயற்சிகளை, அப்பகுதியின் திபொலொக் (Dipolog) மறைமாவட்ட ஆயர், செவேரோ கேர்மாரே (Severo Caermare) அவர்கள் இப்புதனன்று ஆரம்பித்து  வைத்தார்.

இத்தாலியின் நேப்பிள்ஸ் பகுதியில் ஓர் உயர்நிலை குடும்பத்தில் 1612ம் ஆண்டு மேமாதம் பிறந்த பல்லியோலா அவர்கள், 1644ம் ஆண்டு, மிந்தனாவோ பகுதியில் தன் மறைபரப்புப் பணியைத் துவக்கினார்.

அவரால் மனமாற்றம் பெற்று, திருமுழுக்கு பெற்ற பழங்குடித் தலைவர், கிறிஸ்தவ மறையை விட்டு விலகியதால், அவரை மீண்டும் கிறிஸ்தவ மறையில் சேர்க்க அருள்பணி பல்லியோலா அவர்கள் முயற்சித்த வேளையில் கொல்லப்பட்டார் என்று UCAN செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.

அருள்பணி பல்லியோலா அவர்கள் புனிதராக அறிவிக்கப்பட்டால், பிலிப்பின்ஸ் நாட்டின் மூன்றாவது புனிதராக அவர் விளங்குவார் என்று UCAN செய்தி கூறுகிறது.

ஆதாரம் : UCAN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.