2016-01-07 16:16:00

காண்டர்பரி பேராலயத்தில் 6ம் நூற்றாண்டு ஆயர் செங்கோல்


சன.07,2015. திருஅவை வரலாற்றின் 6ம் நூற்றாண்டு முதல், தனிச் சிறப்பு பெற்ற ஓர் ஆயர் செங்கோலின் தலைப்பகுதி, சனவரி 9,10 மற்றும் 16,17 ஆகிய நாட்களில், இலண்டன் மாநகரில், காண்டர்பரி பேராலயத்தில் மக்கள் பார்வைக்கு வைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆங்கிலோ சாக்சன் இனத்தவரை, கிறிஸ்தவ மறைக்கு மனம் திருப்ப, 597ம் ஆண்டு, திருத்தந்தை புனித முதலாம் கிரகரி அவர்கள், ஆயரான புனித அகஸ்டின் அவர்களை அனுப்பிய அக்காலக் கட்டத்துடன் தொடர்புடைய இச்செங்கோலின் தலைப் பகுதி, பேராலயத்தில் வைக்கப்பட உள்ளது.

உரோம் நகரில் உள்ள புனித கிரகரி துறவு மடத்தில் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ள  நினைவுச்  சின்னம், ஆங்கிலிக்கன் பேராலயத்திற்கு தற்காலிகமாக வழங்கப்படுகிறது.

இது குறித்து பேசிய, திருப்பீட கலாச்சார அவையின் தலைவர், கர்தினால் ஜியான்பிரான்கோ இரவாசி (Gianfranco Ravasi) அவர்கள், கிறிஸ்தவ ஒன்றிப்பு வாரம் கொண்டாடப்படவிருக்கும் இவ்வேளையில், கத்தோலிக்கருக்கும், ஆங்கிலிக்கன் சபையினருக்கும் பொதுவான இந்த முக்கிய அடையாள பொருள், மக்கள் பார்வைக்கு வைக்கப்படுவது, தகுந்ததோர் அடையாளம் என்று கூறினார்.

மேலும், காண்டர்பரி ஆங்கிலிக்கன் பேராயர் ஜஸ்டின் வெல்பி (Justin Welby) அவர்களின் அழைப்பை ஏற்று, சனவரி 11ம் தேதி முதல், 15ம் தேதி முடிய ஆங்கிலிக்கன் தலைவர்களின் கூட்டம் பேராலயத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆதாரம் : ICN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.