2016-01-07 16:10:00

உரையாடல் மட்டுமே உண்மை அமைதிக்கு வழி - திருத்தந்தை


சன.07,2015. உரையாடல் மட்டுமே உலகில் நிலவும் சகிப்பற்ற நிலையையும், பாகுபாடுகளையும் களைய உதவும் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஒரு காணொளி செய்தியில் கூறினார்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஒவ்வொரு மாதமும் வழங்கிவரும் செபக் கருத்துக்கள், நிகழும் இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டின் ஒரு புதிய முயற்சியாக, முதன் முதலாக ஒரு காணொளி வடிவில் இப்புதன் மாலை வெளியிடப்பட்டது.

"பல்வேறு மத நம்பிக்கைகளைக் கொண்ட ஆண்கள், பெண்கள் நடுவே நிகழும் உண்மையான உரையாடல், அமைதி, நீதி ஆகிய கனிகளை உருவாக்கவேண்டும்" என்பது, 2016ம் ஆண்டு, சனவரி மாதம் திருத்தந்தையின் அகில உலகக் கருத்தாக வெளியிடப்பட்டது.

இந்தக் கருத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்ட ஒரு காணொளித் தொகுப்பில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் செபக் கருத்தை இன்னும் சிறிது ஆழமாக, இஸ்பானிய மொழியில் விளக்கினார்.

உலகில் அன்பை உருவாக்க, பல்சமய உரையாடல் ஒரு முக்கிய தேவையாக உள்ளது என்றும், உலகில் உள்ள பல மக்கள் தங்களை மத நம்பிக்கை கொண்டவர்கள் என்று கூறுவது, மதங்களுக்கு இடையே உரையாடலை வளர்க்க வழி வகுக்கிறது என்றும் திருத்தந்தை தன் காணொளிச் செய்தியில் எடுத்துரைத்தார். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.