2016-01-06 15:23:00

மத நல்லுறவு, இந்தியாவின் 1000 ஆண்டு பாரம்பரியம் - தலாய் லாமா


சன.06,2016. மதங்களிடையே நல்லுறவு என்ற பாரம்பரியம் இந்தியாவில் கடந்த 1000 ஆண்டுகளுக்கும் மேலாக விளங்குகிறது என்று புத்த மதத் தலைவர், தலாய் லாமா அவர்கள் கூறினார்.

தன் சொந்த நாடான திபெத்திலிருந்து வெளியேறி, இந்தியாவில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்துவரும் தலாய் லாமா அவர்களின் 80வது பிறந்தநாள் கொண்டாட்டங்களின்போது இவ்வாறு கூறினார்.

சகிப்புத் தன்மையும், மதங்களிடையே நல்லுறவும் கொண்டுள்ள ஒரு சில நாடுகளில் இந்தியாவும் ஒன்று எனவும், அந்த வரலாற்றை இந்திய இளையோர் சரியான முறையில் பயிலவேண்டும் எனவும் தலாய் லாமா அவர்கள் தன் உரையில் எடுத்துரைத்தார்.

அரசியல் மற்றும் சமுதாயத் தலைவர்கள் பலர் கலந்துகொண்ட இந்த விழாவில், நொபெல் அமைதி விருது பெற்ற கைலாஷ் சத்யார்த்தி அவர்களும் பங்கேற்றார்.

திபெத்து நாட்டைவிட்டு 1959ம் ஆண்டு வெளியேறிய தலாய் லாமா அவர்கள், அன்று முதல் இந்தியாவில் வாழ்ந்துவருகிறார் என்பதும், நாடுவிட்டு வாழும் திபெத்து மக்களுக்கென இமயமலைப் பகுதியில், தரம்சாலா என்ற நகரம் உருவாக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கன. 

ஆதாரம் : UCAN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.