2016-01-06 14:42:00

திருக்காட்சி விழா மறையுரை : நீதிக் கதிரவனின் நிலா, திரு அவை


சன.,06,2016. பெத்லகேமில் பிறந்த குழந்தை இயேசுவைத் தேடி மூன்று ஞானிகள் வந்து தரிசித்ததை, திருக்காட்சிப் பெருவிழா என திரு அவைச் சிறப்பிக்கிறது. இப்பெருவிழாவை முன்னிட்டு, இப்புதன் காலை உள்ளூர் நேரம் பத்து மணிக்கு, அதாவது, இந்திய நேரம், பிற்பகல் 2.30 மணிக்கு, வத்திக்கான் தூய பேதுரு பேராலயத்தில் திருப்பலி நிறைவேற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இயேசுவிடமிருந்து ஒளியைப் பெற்று பிரதிபலிக்கும் திரு அவையின் அங்கத்தினர்களாக இருக்கும் நம் கடமை குறித்து தன் மறையுரையில் எடுத்துரைத்தார். இதோ அம்மறையுரையின் தமிழாக்கம்:

புனித நகரான எருசலேமை நோக்கி, இறைவாக்கினர் எசாயா கூறிய வார்த்தைகள் நமக்கும் உரித்தானதாகும். நம்மை நமக்குள்ளேயே கட்டுப்படுத்தி வைத்திருக்கும் அனைத்தையும் விலக்கி, நம் வாழ்வை ஒளிர்விக்கும் ஒளியை கண்டு ஏற்றுக்கொள்ளும் நோக்கில், நாம் முன்னோக்கி நடைபோட வேண்டும் என அவரின் வார்த்தைகள் அழைப்பு விடுக்கின்றன. "எழு! ஒளி வீசு! உன் ஒளி தோன்றியுள்ளது. ஆண்டவரின் மாட்சி உன்மேல் உதித்துள்ளது!" (60:1), என்கிறார் எசாயா. இங்கு ஒளி எனப்படுவது இறைவனின் மகிமை. திருஅவை, தன் சொந்த ஒளி கொண்டே ஒளிர்விடுகின்றது என்ற எண்ணத்தில், தன்னைத் தானே ஏமாற்றிக் கொள்ள முடியாது. திருஅவையை நிலாவுக்கு ஒப்பிடுவதன் மூலம், இந்த உண்மையை அழகாக விளக்குகிறார் புனித அம்புரோஸ். “நிலாவே திரு அவையாகும். திரு அவை, தன் ஒளியால் அல்ல, மாறாக கிறிஸ்துவின் ஒளியால் ஒளிர்கின்றது. திருஅவை தன் ஒளியை நீதியின் கதிரவனிடமிருந்து பெற்றுக்கொள்வதால், அதனால் தெளிவாகச் சொல்லமுடியும் 'இனி வாழ்வது நானல்ல, என்னில் வாழ்வது கிறிஸ்துவே' என்று (Hexaemeron, IV, 8, 32).  

கிறிஸ்துவே, இருளில் ஒளிவிடும் உண்மை ஒளி. இயேசு கிறிஸ்துவில் திருஅவை நங்கூரமிட்டு இருக்கும் வரையிலும், அவரின் ஒளி தன்னில் ஒளிர்வதற்கு அனுமதிக்கும் வரையிலும், திருஅவையால், ஒளியை, தனிமனிதருக்கும், மக்கள் சமூகங்களுக்கும் எடுத்துச் செல்லமுடியும். இதன் பொருட்டே, திரு அவைத் தந்தையர்கள், திரு அவையை நிலாவாகக் கண்டனர்.  நாம் பெற்றுள்ள அழைப்புக்கு இயைந்த வகையில் நாம் பதிலுரைக்க வேண்டுமெனில், மேலிருந்து வரும் ஒளி நமக்கு தேவை.

இயேசுவின் நற்செய்தியை அறிவிப்பது என்பது நமக்குத் தரப்பட்டுள்ள விருப்பத் தேர்வுகளுள் ஒன்றல்ல, அதேவேளை, அது ஒரு வாழ்க்கைத் தொழிலுமல்ல. மறைபோதக திருஅவையாக இருப்பது என்பது, மதம் மாற்றுவதைக் குறிக்கவில்லை. திருஅவையைப் பொருத்த வரையில், மறைபரப்பு என்பது, தன் இயல்பை அப்படியே வெளிப்படுத்துவதாகும்.  அதாவது, இறை ஒளியைப் பெற்று அதனைப் பிரதிபலிப்பதாகும். இதைத் தவிர வேறு வழியில்லை. திரு அவையின் அழைப்பு என்பது மறைபரப்பு பணிக்கானது. எண்ணற்றோர் இந்த மறைபரப்பு அர்ப்பணத்திற்காக நம்மை நோக்கியிருக்கின்றனர், ஏனெனில், அவர்களுக்கு கிறிஸ்துவைக் குறித்து அறிய வேண்டியிருக்கிறது.  அவர்கள், தந்தையாம் இறைவனின் முகத்தைக் காண வேண்டியுள்ளது.  

உண்மையின் விதைகள் எல்லா இடங்களிலும் உள்ளன என்பதற்கு மத்தேயு நற்செய்தியில் காணப்படும் மூன்று ஞானிகள், ஒரு வாழும் எடுத்துக்காட்டாக உள்ளனர். ஒரு நல்ல, விசுவாசமுள்ள தந்தையாக தன்னை ஏற்றுக்கொள்ள அனைத்து மக்களுக்கும் அழைப்பு விடுக்கும் இறைவனின், வாழும் சாட்சிகளாக இருக்கும் இந்த ஞானிகள், அவரின் கொடைகளும்கூட. இவ்வுலக முழுமையிலிருந்து, இறைவீட்டிற்குள் வரவேற்கப்படும், ஆண்கள் மற்றும் பெண்களின் பிரதிநிதிகளாக இந்த ஞானிகள் உள்ளனர். இயேசுவின் முன்னால், இனம், மொழி, கலாச்சாரம் என்ற அனைத்து பிரிவுகளும் மறைந்து போகின்றன. குழந்தை இயேசுவில், மனித குலம் ஒன்றிப்பை கண்டுகொள்கிறது. ஒவ்வொரு மனிதரின் இதயத்திலும் இருக்கும் இறைவனுக்கான ஏக்கத்தைக் கண்டு, அதற்கேற்ப செயலாற்ற வேண்டிய கடமை திருஅவைக்கு உள்ளது. அந்த ஞானிகளைப் போலவே இன்றும், எண்ணற்ற மனிதர்கள், உறுதியான விடைகள் கிடைக்காமல், அமைதியற்ற இதயங்களுடன் தொடர்ந்து தேடிக்கொண்டிருப்பதைக் காண்கிறோம். பெத்லகேமை நோக்கியப் பாதையைக் காட்டும் விண்மீனைத் தேடிக் கொண்டிருக்கின்றனர். 

வானத்தில் எத்தனையோ விண்மீன்கள் உள்ளன. இருப்பினும், கீழ்த்திசை ஞானிகள், ஒரு குறிப்பிட்ட, புதிய விண்மீனையே பின் தொடர்ந்தனர். ஏனெனில், அதுவே மற்றனைத்தையும் விட பிரகாசமாக ஒளிர்ந்தது. அவர்கள் வானகப் புத்தகத்தை தொடர்ந்து உற்று நோக்கிக் கொண்டிருந்தனர்,  தங்கள் கேள்விகளுக்கு விடையைத் தேடிக் கொண்டிருந்தனர்.  கடைசியில், அவர்களுக்கு அந்த ஒளி தோன்றியது. அந்த விண்மீன் அவர்களை மாற்றியது. அவர்களின் அன்றாட கவலைகளை பின்னுக்குத் தள்ளி, ஒதுக்கி வைத்துவிட்டு, ஒரு புதிய பயணத்தை துவக்க வைத்தது அந்த விண்மீன். அவர்கள் செவிமடுத்த ஆழ் மனதின் குரல், அந்த விண்மீனை பின்பற்ற, அவர்களை நடத்திச் சென்றது. யூதர்களின் அரசரை பெத்லகேமின் ஓர் ஏழைக் குடிலில் காணும்வரை அவர்களுக்கு அந்த விண்மீன் வழி காட்டிச் சென்றது.

இவையெல்லாம் இன்று நமக்கு ஒன்றைச் சொல்ல வருகின்றன.  "யூதர்களின் அரசராகப் பிறந்திருக்கிறவர் எங்கே? அவரது விண்மீன் எழக் கண்டோம். அவரை வணங்க வந்திருக்கிறோம்" (மத். 2:2) என, ஞானியர் அன்று கேட்ட அதே கேள்வியை, நாம் இன்று மீண்டும் கேட்பது சிறப்பு. இறைவனின் விருப்பத்தை புரிந்துகொள்ள, அவர் வழங்கும் அடையாளங்களைத் தேடி நாம் செல்லும்படி, இக்காலத்தில் நாம் உந்தப்படுகிறோம். தாயையும் மகவையும் கண்டுகொள்ள நாம் பெத்லகேமுக்கு அழைக்கப்படுகிறோம். கடவுள் நமக்கு வழங்கும் ஒளியைப் பின்பற்றிச் செல்வோம்.

இயேசுவின் முகத்திலிருந்து வரும் ஒளி, இரக்கத்தையும், பற்றுமாறா உறுதிப்பாட்டையும் கொண்டதாக உள்ளது. அவரை நாம் கண்டுகொண்டவுடன், நம் முழு இதயத்தோடு அவரை வணங்குவோம்.  நம் விடுதலை, நம் புரிந்துகொள்ளல், நம் அன்பு ஆகிய கொடைகளை அவருக்குப் பரிசாக அளிப்போம். உண்மை ஞானம் என்பது, இந்த குழந்தையின் முகத்தில் ஒளிந்திருக்கிறது என்பதை கண்டுகோள்வோம். இங்குதான், இந்த பெத்லகேம் எளிமையில்தான், திருஅவையின் வாழ்வு தொகுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொருவரையும் கவர்ந்திழுத்து, அமைதியின் பாதையில் மக்கள் தங்கள்  பயணத்தை மேற்கொள்ள வழிநடத்தும் அந்த ஒளி ஊற்று, இங்குதான் உள்ளது.

இவ்வாறு, இப்புதன் திருக்காட்சி திருவிழாத் திருப்பலியில் மறையுரையாற்றினார், திருத்தந்தை பிரான்சிஸ். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.