2016-01-06 15:16:00

உலகின் முதல் ‘ஜீரோ வேஸ்ட்’ சமூகம்!


சன.06,2016. ஜப்பானில் உள்ள கமிகட்சு (Kamikatsu) நகர மக்கள் ’உலகின் முதல் ஜீரோ வேஸ்ட் சமூகம்’ அதாவது, ‘உலகிலேயே முதன்முதலாக எதையும் வீணாக்காத சமூகம்’ என்ற சிறப்பைப் பெற்றிருக்கிறார்கள்.

கமிகட்சுவில் வாழும் மக்கள், குப்பைகளை மிகத் திறமையாகக் கையாள்கினறனர்.  குப்பைகளைத் தண்ணீரால் சுத்தம் செய்தபின், அவற்றை 34 பிரிவுகளாக வகைப்படுத்தி, காகிதம், அலுமினியம், பிளாஸ்டிக், கண்ணாடி, ரப்பர், மட்கும் குப்பை, மட்காத குப்பை என்று பிரிக்கிறார்கள்.

மட்கும் குப்பைகளை மட்க வைத்து, வீட்டுத் தோட்டத்துக்குப் பயன்படுத்திக்கொள்ளும் இம்மக்கள், மற்ற குப்பைகள் அனைத்தும் மறுசுழற்சி மையத்துக்கு அனுப்பி வைத்து விடுகிறார்கள்.

“இத்திட்டத்தை ஆரம்பித்தபோது மக்கள் எதிர்த்தனர். கொஞ்சம் கஷ்டப்பட்டனர். விரைவிலேயே ‘ஜீரோ வேஸ்ட்’ திட்டத்துக்குப் பழகிவிட்டனர். பாட்டில் மூடி தனியாகவும் பாட்டில் தனியாகவும் போடும் அளவுக்கு விழிப்புணர்வு பெற்றுவிட்டனர். பழைய துணிகள், பிளாஸ்டிக் போன்றவற்றை வைத்து பொம்மைகள், அலங்காரப் பொருட்களைச் செய்துவிடுகிறார்கள். காய்கறி, பழக் கழிவுகளை மட்கும் குப்பைகளாக மாற்றி, செடிகளுக்கு உரமாக்கி விடுகிறார்கள். பயன்படுத்திய சில பொருட்களைக் கடைகளில் கொடுத்துவிட்டு, புதிய பொருட்களை கூடுதல் கட்டணம் இன்றி இங்கே வாங்கிக்கொள்கிறார்கள். வீட்டு உபயோகத்திலிருந்து தொழிற்சாலை வரை கழிவு மேலாண்மை திறம்படச் செய்யப்படுகிறது.

“பழைய வீடுகளை இடித்தால், அதில் கிடைக்கும் பொருட்களை வைத்தே புதிய வீட்டைக் கட்டி விடுகிறார்கள். கமிகட்சு நகரில் 1,700 மக்கள் வசிக்கின்றனர். 80 சதவீத கழிவுகள் மறுசுழற்சிக்குச் சென்றுவிடுகின்றன. 20 சதவீத கழிவுகள் உரமாக மண்ணுக்குச் சென்றுவிடுகின்றன. கடந்த 13 ஆண்டுகளாக கழிவுகளைக் கையாள்வதில் நாங்கள் சிறந்தவர்களாக மாறிவிட்டோம். ஜீரோ வேஸ்ட் அகடமியையும் நாங்கள் நடத்தி வருகிறோம். பள்ளி மாணவர்கள், வெளிநாட்டினர் ஆண்டு முழுவதும் இங்கே வந்து, கழிவு மேலாண்மையைக் கற்றுக்கொண்டு செல்கிறார்கள்’’ என்கிறார் கமிகட்சு அகடமியின் பொறுப்பாளர்.

கழிவு மேலாண்மையில் தற்போது 80 விழுக்காடு நிலையை அடைந்துள்ள இந்நகரம், 2020ம் ஆண்டிற்குள், 100 விழுக்காடு கழிவு மேலாண்மையை அடைந்துவிடும் என்று இந்நகர அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். 

ஆதாரம் : Agencies / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.