2016-01-05 15:32:00

சிரியாவில் பிரான்சிஸ்கன் அருள்பணி Aziz விடுதலை


சன.05,2016. கடந்த ஜூலையில், சிரியாவில் கடத்தப்பட்ட பிரான்சிஸ்கன் சபை அருள்பணி Dhiya Aziz அவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ்விடுதலை குறித்து வத்திக்கான் வானொலிக்கு பேட்டியளித்த புனித பூமி புரவலர் பிரான்சிஸ்கன் சபை அருள்பணி Pier Battista Pizzaballa அவர்கள், இத்தகவலை உறுதி செய்துள்ளதோடு, சிரியாவில் நிலைமை மிகவும் பயங்கரமானதாக இன்னும் உள்ளது என்று தெரிவித்தார்.

ஈராக்கைச் சேர்ந்த அருள்பணி Dhiya அவர்கள் பற்றி, கடந்த ஜூலை 4ம் தேதியிலிருந்து எந்தத் தகவலும் இல்லாமல் இருந்த நிலையில், இப்போது இவர் விடுதலை செய்யப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கின்றது மற்றும் இவரைக் கடத்தியவர்கள் நன்றாக நடத்தியுள்ளார்கள் என்று அருள்பணி Pizzaballa அவர்கள் கூறினார்.

அருள்பணி Dhiya அவர்களின் விடுதலைக்காகச் செபித்த அனைவர்க்கும் நன்றி தெரிவித்துள்ள அருள்பணி Pizzaballa அவர்கள், சிரியாவில் இன்னும் காணாமல் போயுள்ள துறவிகளுக்காகவும், அந்நாட்டில் அமைதி நிலவவும் செபிப்போம் என்றும் கேட்டுள்ளார்.

சிரியாவில் சண்டை தொடங்கியதிலிருந்து புரட்சிக் குழுக்களும், ஜிகாதிகளும், இரு ஆயர்கள் உட்பட பல முக்கிய கிறிஸ்தவத் தலைவர்களைக் கடத்தியுள்ளனர். அந்தியோக் ஆர்த்தடாக்ஸ் சபை பேராயர் Boulos Yazigi, சிரியாக் ஆர்த்தடாக்ஸ் சபை பேராயர் Gregorios Youhanna Ibrahim  ஆகிய இருவரும் 2013ம் ஆண்டு ஏப்ரல் 22ம் தேதி கடத்தப்பட்டனர். இத்தாலியைச் சேர்ந்த இயேசு சபை அருள்பணி Paolo Dall'Oglio அவர்கள், இன்னும் இரு குருக்கள் மற்றும் சில பொதுநிலை தன்னார்வலர்களுடன் 2013ம் ஆண்டு ஜூலை 9ம் தேதி கடத்தப்பட்டார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.