2016-01-05 15:31:00

சவுதி அரேபியா மரணதண்டனைகளுக்கு மனித உரிமை கழகங்கள் எதிர்ப்பு


சன.05,2016. சவுதி அரேபியாவில் மரணதண்டனைகள் நிறைவேற்றப்பட்டுள்ளது தொடர்பாக, அந்நாட்டுக்கும் ஈரானுக்கும் இடையே மோதல்கள் வலுத்துள்ள நிலையில், இவ்விரு நாடுகளும் மேலும் மோதல்களைத் தவிர்க்குமாறு ஐ.நா. பொதுச்செயலர் பான் கி மூன் அவர்கள் கேட்டுள்ளார்.

சவுதி அரேபியா மற்றும் ஈரானின் வெளியுறவு அமைச்சர்களிடம் தொலைபேசியில் பேசிய பான் கி மூன் அவர்கள் இவ்வாறு கேட்டுள்ளார்.

சவுதி அரேபியா வெளியுறவு அமைச்சர் Abel bin Ahmed Al-Jubeir அவர்களிடம் பேசியபோது, மரணதண்டனைக்கு எதிரான தனது வன்மையான எதிர்ப்பையும், மதகுரு Nimr Bakr al-Nimr அவர்களுக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது குறித்த தனது ஏமாற்றத்தையும் வெளியிட்டுள்ளார் பான் கி மூன்.

மேலும், மரணதண்டனைக்கு எதிராக எதிர்ப்பை வெளியிட்டுள்ள ஹூயுமன் ரைட்ஸ் வாட்ச் என்ற அமைப்பு, சவுதி அரேபியா, ஒரே நாளில் 47 பேரைத் தூக்கிலிட்டு, 2016ம் ஆண்டை வெட்கத்துக்குரிய முறையில் தொடங்கியுள்ளது என்று குறை கூறியுள்ளது. ஆம்னஸ்டி இன்டர்நேஷனல் பன்னாட்டு மனித உரிமைகள் கழகமும், ஐ.நா.அதிகாரிகளும் இம்மரணதண்டனைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

சவுதி அரேபியாவில் 2014ம் ஆண்டில் 90 பேருக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது. ஆனால், 2015ம் ஆண்டில் இவ்வெண்ணிக்கை குறைந்தது 157 ஆகும். 

மேலும், தெஹ்ரானில் சவுதி தூதரகத்தை ஈரானிய ஆர்ப்பாட்டக்காரர்கள் தாக்கிய சம்பவத்தை ஐ.நா. பாதுகாப்பு அவை கடுமையாக கண்டித்துள்ளது.

ஆதாரம் : UN/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.