2016-01-05 15:28:00

சவுதி அரேபிய மரணதண்டனை,லெபனான்,மத்திய கிழக்கில் எதிரொலி


சன.05,2016. பிரபலமான ஷியா இஸ்லாம் பிரிவு மதகுரு Nimr Bakr al-Nimr அவர்களுக்கு, சவுதி அரேபியா அரசு மரணதண்டனை நிறைவேற்றியிருப்பது, லெபனானிலும், மத்திய கிழக்கிலும் உடனடி கடும் எதிர் விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது என்று, லெபனான் மாரனைட் வழிபாட்டுமுறை அருள்பணியாளர் ஒருவர் கூறினார்.

சனவரி 2, கடந்த சனிக்கிழமையன்று சவுதி அரேபியாவில் நிறைவேற்றப்பட்டுள்ள  மரணதண்டனை குறித்து Fides செய்தி நிறுவனத்திடம் கருத்து தெரிவித்த, லெபனான் பாப்பிறை மறைப்பணி கழகங்களின் தேசிய இயக்குனர் அருள்பணி Rouphael Zgheib அவர்கள், ஏமன், சிரியா மற்றும் ஈராக்கில் சண்டைகள் அதிகரிக்கக்கூடும் என்று எச்சரித்தார்.

லெபனானில், 2014ம் ஆண்டு மே மாதத்திலிருந்து காலியாகவுள்ள அரசுத்தலைவர் இடம் இந்தக் கிறிஸ்மஸ்க்குள் நிரப்பப்படும் என்றும், இதற்கு சவுதி அரேபியாவின் ஆதரவு இருந்தது என்றும் கூறிய அருள்பணி Zgheib அவர்கள், இத்தேர்தலுக்கு சவுதி அரேபியாவின் ஆதரவு இருந்ததாலே, ஷியா பிரிவின் ஆதரவு கிடைக்காமல் இருந்தது என்றும் கூறினார்.

டிசம்பர் 2ம் தேதி, சவுதி அரேபியா, பிரபலமான ஷியா பிரிவு மதகுரு al-Nimr உள்ளிட்ட 47 பேரை வாளால் வெட்டி மரண தண்டனையை நிறைவேற்றியது. இது தொடர்பான சர்ச்சையால் ஈரானுடன் அந்நாட்டுக்கு மோதல் உருவாகியுள்ளது. இதைத் தொடர்ந்து, ஈரானுடனான தூதரக உறவுகளை முறித்துக் கொண்டுள்ளது சவுதி அரேபியா. 

ஆதாரம் : Fides /வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.