2016-01-05 14:22:00

இது இரக்கத்தின் காலம்... மன்னிப்பு, மரணத்தையும் வெல்லும்


ஈரான் நாட்டில் இடம்பெற்ற உண்மை நிகழ்வு இது. 2014ம் ஆண்டு, ஏப்ரல் மாதம் 15ம் தேதி, அந்நாட்டில் மற்றுமோர் மரணதண்டனை மக்கள் பார்வையில் நடைபெறவிருந்தது. 27 வயதான பலால் (Balal) என்ற இளையவர், தூக்குமேடையில் வைக்கப்பட்டிருந்த ஒரு நாற்காலியின் மீது நிறுத்தப்பட்டார். அவரது கண்கள், கறுப்புத் துணியால் கட்டப்பட்டன; கழுத்தைச் சுற்றி, தூக்குக் கயிறும் மாட்டப்பட்டது.

7 ஆண்டுகளுக்கு முன் இரு இளையோரிடைய ஏற்பட்ட ஒரு சண்டையில், 20 வயது நிறைந்த இளையவர் பலால், கத்தியால் குத்தியதால், Abdollah என்ற 18 வயது இளைஞர் இறந்தார். ஏழு ஆண்டுகளாக நடைபெற்ற அவ்வழக்கின் இறுதியில், பலாலுக்குத் தூக்குதண்டனை விதிக்கப்பட்டது. அத்துடன், தூக்குமேடையில், பலால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அந்த நாற்காலியை உதைத்துத் தள்ளி, அந்த இளைஞனைக் கொல்லும் உரிமை, Abdollahவின் பெற்றோருக்கு வழங்கப்பட்டிருந்தது. ஈரான் நாட்டின் பல பகுதிகளில் பின்பற்றப்படும் ஒரு வரைமுறை இது.

தூக்குமேடையைச் சூழ்ந்து நின்றவர்களில், பலாலின் தாய் Kobra அவர்களும் ஒருவர். நடக்கப்போகும் கொடுமையைத் தடுக்கமுடியாமல், கண்களில் கண்ணீர் வழிந்தோடிய வண்ணம் அவர் காத்திருந்தார். இறந்துபோன Abdollahவின் தாய் Samerah அவர்கள், அந்த நாற்காலியை நெருங்கியபோது, ஓர் அற்புதம் நிகழ்ந்தது. தாய் Samerah அவர்கள், இளைஞன் பலாலின் கன்னத்தில் ஓங்கி அறைந்தார். பின்னர், அவன் கழுத்தைச் சுற்றி மாட்டப்பட்டிருந்த தூக்குக் கயிறை அவிழ்த்துவிட்டார். அருகில் நின்ற Abdollahவின் தந்தை, பலாலின் கண் கட்டுகளை அவிழ்த்து, அவனை அந்த நாற்காலியிலிருந்து இறக்கிவிட்டார்.

முற்றிலும் எதிர்பாராத வகையில் தன் மகனுக்கு வாழ்வுப் பிச்சை வழங்கப்பட்ட அற்புதத்தைக் கண்டு, ஆனந்த அதிர்ச்சி அடைந்த பலாலின் தாய், தூக்குமேடையை நோக்கி ஓடினார். மேடையிலிருந்து இறங்கிவந்த தாய் Samerah அவர்களைக் கட்டியணைத்தார். இரு அன்னையரும் கண்ணீரில் கரைந்தனர். "தன் மகனைக் கொன்றவனை, மரணதண்டனையிலிருந்து விடுவித்தத் தாய்" என்ற தலைப்பில், அடுத்த நாள் உலக ஊடகங்களில் இச்செய்தி வெளியானது.

'பழிக்குப் பழி' என்ற உரிமையை, தன் நாட்டு அரசே தனக்கு வழங்கியிருந்தாலும், அதை மீறி, இரக்கத்தை, மன்னிப்பை வழங்கமுடியும் என்பதை, ஒர் அன்னை நிரூபித்தார். மன்னிப்பு, மரணத்தையும் வெல்லும் சக்தி கொண்டது என்பதை இவ்வுலகம் உணரவேண்டும். மன்னிப்பு என்ற மழை பொழிவதற்கு, இரக்கம் என்ற கார்மேகம் திரண்டு வரவேண்டும்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.