2016-01-04 14:55:00

பெண் கைதிகளுக்கு உதவுமாறு கர்தினால் இரஞ்சித்திடம் கோரிக்கை


சன.04,2016. இலங்கை அரசு, பெண் கைதிகளின் விசாரணைகளைத் துரிதப்படுத்தி,  அவர்கள் தங்கள் பிள்ளைகளுடன் நல்ல தொடர்பு வைத்துக்கொள்ளவும், விரைவில் குடும்பங்களுக்குத் திரும்பவும் நடவடிக்கை எடுக்குமாறு, அந்நாட்டு கர்தினால் மால்கம் இரஞ்சித் அவர்களை வலியுறுத்தினர், வெலிக்கடா சிறையின் பெண் கைதிகள்.

இலங்கையின் வெலிக்கடா சிறையின் பெண் கைதிகள் பிரிவில், இப்புத்தாண்டில் திருப்பலி நிறைவேற்றிய கொழும்பு பேராயர் கர்தினால் மால்கம் இரஞ்சித் அவர்களிடம், அத்திருப்பலியில் கலந்துகொண்ட பெண் கைதிகள், தங்கள் கோரிக்கைகளை முன்வைத்தனர்.

சிங்களம், தமிழ், ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளில் நிறைவேற்றப்பட்ட இத்திருப்பலிக்குப் பின்னர் கர்தினால் இரஞ்சித் அவர்களைச் சந்தித்து தங்களின் கோரிக்கைகளை எழுத்துவடிவில் சமர்ப்பித்தனர் வெலிக்கடா சிறையின் பெண் கைதிகள்.

கைதிகளில் பல தாய்மார்கள் உள்ளனர், இவர்களின் பிள்ளைகள் வீடுகளில் உள்ளனர், தாய்மார் இல்லாமல் பிள்ளைகள் பல துன்பங்களைச் சந்திக்கின்றனர் என்று கூறியுள்ள அக்கைதிகள், தங்கள் சார்பாக, அரசு அதிகாரிகளிடம் பரிந்துபேசுமாறு கர்தினால் இரஞ்சித் அவர்களைக் கேட்டுக்கொண்டனர்.

மேலும், இந்த இரக்கத்தின் ஆண்டில் இயேசுவின் இரக்கத்தில் வாழ முயற்சிக்குமாறு தனது மறையுரையில் வலியுறுத்தினார் கர்தினால் மால்கம் இரஞ்சித். இக்கைதிகளில் சிலர் 10 முதல் 15 ஆண்டுகளாக சிறையில் இருப்பதாகக் கூறப்பட்டது.

ஆதாரம் : AsiaNews /வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.