2016-01-04 14:45:00

இலங்கையில் போரால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு 16,000 வீடுகள்


சன.04,2016. வடகிழக்கு இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்டு, புலம்பெயர்ந்தவர்களுக்கு கடந்த 2015ம் ஆண்டில் 16,000 வீடுகளை இந்திய அரசு கட்டித் தந்துள்ளது.

இலங்கையில், 1,500 கோடி ரூபாய் மதிப்பில் 50 ஆயிரம் வீடுகளைக் கட்டித் தருவதாக கடந்த 2010ம் ஆண்டு இந்திய அரசு அறிவித்தது. இதுவரை 43,800 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு, பயனாளிகளுக்கு அளிக்கப்பட்டுள்ளன.

அடுத்த சில மாதங்களில் 2,000 வீடுகள் கட்டி முடிக்கப்படும். மத்திய இலங்கையில் தேயிலை தோட்டத் தொழிலாளர்களுக்காக 4,000 வீடுகள் கட்டும் பணி விரைவில் தொடங்கும். இலங்கை அரசு மற்றும் இதர அமைப்புகளின் நெருங்கிய ஆலோசனையின்பேரில் இத்திட்டம் அமல்படுத்தப்பட்டு வருகிறது என்று சொல்லப்பட்டுள்ளது.

மேலும், இலங்கையில் பல்வேறு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள தமிழர்கள் ஒரு இலட்சம் பேருக்கு வீடு கட்ட நிலம் வழங்கப்படும் என்று அந்நாட்டு அரசுத்தலைவர் மைத்ரிபால சிறிசேனா அவர்கள் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் போரின் முடிவில் தமிழர் பகுதிகள் பலவற்றை இலங்கை இராணுவம் கைப்பற்றியது. அதனால் கடந்த 6 ஆண்டுகளாக அந்நாட்டு அரசு முகாம்களில் இலட்சக்கணக்கான தமிழர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், அவ்வாறு முகாம்களில் வசிக்கும் தமிழர்கள் ஒரு இலட்சம் பேருக்கு வீடு கட்டிக்கொள்ள நிலம் வழங்கப்படும் என்று இலங்கை அரசு அறிவித்துள்ளது.

ஆதாரம் : தி இந்து /வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.