2016-01-02 14:58:00

திருத்தந்தை பிரான்சிஸ்:மரியா, மன்னிப்பின் தாய்


சன.02,2016. இறைவனின் அன்னையாகிய மரியா, மன்னிப்பின் அன்னையாகவும் இருக்கிறார், இந்த மன்னிப்புக்கு, வரையறைகள் எதுவும் தெரியாது மற்றும் இது நம் வாழ்வைப் புதுப்பித்து அதை உண்மையான மகிழ்வால் நிரப்புகின்றது என்று  திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.

தூய கன்னி மரியா, இறைவனின் அன்னை என்ற விழாவைச் சிறப்பித்த சனவரி 1, இவ்வெள்ளி மாலையில், உரோம் தூய மேரி மேஜர் பசிலிக்காவில் எளிய முறையில் புனிதக் கதவைத் திறந்து வைத்து திருப்பலி நிறைவேற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தனது மறையுரையில் இவ்வாறு கூறினார்.

பல வேறுபாடுகளுடன்கூடிய இந்த உலகின் ஞானத்திற்கு அல்லது சட்டத்தின் வறட்டு வாதங்களுக்குமுன் நிறுத்திவிடாத மன்னிப்பை, மன்னிப்பின் அன்னை, திருஅவைக்குக் கற்றுத் தருகிறார் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இரக்கத்தின் அன்னையே, இறைவனின் தாயே, மன்னிப்பின் அன்னையே, நம்பிக்கையின் அன்னையே, தூய மகிழ்வால் முழுவதும் நிறைந்த அன்னையே வாழ்க என்று பொருள்படும் Salve Mater Misericordiae! என்ற பழங்கால இலத்தீன் பாடலையும் தனது மறையுரையில் குறிப்பிட்டார் திருத்தந்தை.

தூய கன்னி மரியாவை, எல்லாவற்றுக்கும் மேலாக இரக்கத்தின் அன்னையாக நாம் இறைஞ்சுவது இந்த நாளில் மிகவும் பொருத்தமாக உள்ளது என்றும், நாம் திறந்துள்ள புனிதக் கதவு, உண்மையில், இறைஇரக்கத்தின் புனிதக் கதவு என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ். இந்தப் புனிதக் கதவைக் கடந்து செல்லும் ஒவ்வொருவரும், முழு நம்பிக்கை மற்றும் அச்சத்திலிருந்து விடுதலை பெற்றவர்களாய், வானகத்தந்தையின் இரக்கம்நிறை அன்பில் நுழைவதற்கு அழைக்கப்படுகின்றனர் என்றும் கூறிய திருத்தந்தை,  இரக்கத்தின் யூபிலி ஆண்டிற்கும், மரியா, இரக்கத்தின் அன்னை என்பதற்கும் இடையேயுள்ள தொடர்பை விளக்கினார். மரியா, இரக்கத்தின் அன்னை, ஏனென்றால், அவர், தமது வயிற்றில், இயேசுவாம் இறை இரக்கத்தின் திருமுகத்தையே தாங்கியிருந்தார், நம் மீட்புக்காக மனித உரு எடுத்த இறைமகன், தம் தாயை நமக்குத் தாயாகக் கொடுத்திருக்கிறார், இத்தாய், இந்த வாழ்வுப் பயணத்தில் முழுவதும் நம்முடன் இணைகிறார், அதனால் நாம் தனித்து விடப்பட மாட்டோம், குறிப்பாக, நம் துன்ப மற்றும் நிச்சயமற்ற நேரங்களில் தனித்து விடப்பட மாட்டோம்  என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த நவீன உலகில் மன்னிப்பு என்ற கருத்து தவறாகப் புரிந்துகொள்ளப்படுகின்றது, கிறிஸ்தவ வாழ்வில் இது இடராக உள்ளது என்றுரைத்த திருத்தந்தை, மன்னிக்க இயலாமல் இருப்பவர் அன்பின் முழுமையை இன்னும் உணராமல் இருக்கிறார், உண்மையாகவே அன்புகூர்பவரால் மட்டுமே மன்னிக்கவும் மறக்கவும் இயலும் என்றும் கூறினார். மன்னிப்பைத் தேடுபவர்க்கு அதை எப்படி வழங்குவது என்பதற்கு, மரியா திருஅவைக்கு எடுத்துக்காட்டாய் இருக்கிறார் என்றும், மன்னிப்பு, கல்வாரியில் வரையறையின்றி வழங்கப்பட்டதை, மன்னிப்பின் அன்னை, திருஅவைக்குக் கற்றுக் கொடுக்கிறார் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மன்னிப்பு, மகிழ்வுக்கும், இதய அமைதிக்கும் இட்டுச் செல்கின்றது, ஏனென்றால், இது, மரணத்தின் எண்ணங்களிலிருந்து இதயத்திற்கு விடுதலை அளிக்கின்றது, கோபமும் பழிவாங்கலும் இதயத்தைத் துன்புறுத்தி, மனத்தைக் காயப்படுத்துகின்றபோது, இதய அமைதியைப் பறித்துக்கொள்கின்றபோது மன்னிப்பு இதயத்திற்கு விடுதலை அளிக்கின்றது என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.