2016-01-02 15:45:00

டெல்லியில் மாசுகேட்டைக் கட்டுப்படுத்த புதிய திட்டம்


சன.02,2016. டெல்லியில், காற்று மாசுக்கேடு எல்லைகளைத் தாண்டிவிட்டதாகவும், அதனால் நலவாழ்வுக் கேடுகள் ஏற்படலாம் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளவேளை, மாசுக்கேட்டை கட்டுப்படுத்துவதற்கென, தனியார் வாகனங்களுக்கு, புதிய கட்டுப்பாட்டை புதிய ஆண்டிலிருந்து அமல்படுத்தியுள்ளது டெல்லி அரசு.

இப்புதிய கட்டுப்பாட்டின்படி ஒற்றைப்படை தேதியான சனவரி முதல் நாள் டெல்லியில் ஒற்றைப் படை பதிவு எண்கள் கொண்ட வாகனங்கள் மட்டும் ஓடியது.

சனவரி 2, இச்சனிக்கிழமையன்று இரட்டைப் படை எண் கார்களுக்கு மட்டுமே அனுமதி என்பதால், வாகனங்களில் பயணம் செய்வதற்கு நண்பர்கள் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்கின்றனர் என்று சொல்லப்பட்டுள்ளது.

இம்மாதம் 15ம் தேதி வரை, ஞாயிறு தவிர, சோதனை அடிப்படையிலான இந்தக் கட்டுப்பாட்டை சமாளிக்க, பொதுமக்கள் முதல், அரசு வரை பல்வேறு உத்திகளைக் கடைப்பிடித்து வருகின்றனர்.

இந்தியத் தலைநகர் டெல்லியில் காற்று மாசுகேடு, அனுமதிக்கப்பட்ட அளவைவிட மிக அதிகமாக இருப்பதாகவும் இதன் காரணமாக இக்காற்றை சுவாசிப்பவர்களுக்கு மூச்சுத் திணறல் மற்றும் இதய நோய்கள் வரக்கூடும் எனவும், தேரி எனப்படும் தி எனர்ஜி அண்ட் ரிசோர்சஸ் இன்ஸ்ட்டிடியூட் தெரிவித்துள்ளது.

உலகில் ஏறக்குறைய 1,600 நகரங்களில் மேற்கொண்ட ஆய்வில், டெல்லி அதிகம் மாசு கேடு அடைந்த நகரம் என்று உலக நலவாழ்வு நிறுவனம் கணித்துள்ளது.

இந்தியாவில் ஆண்டுதோறும் இடம்பெறும் இறப்புகளில் ஆறு இலட்சத்துக்கு மேற்பட்ட இறப்புகளுக்கு காற்று மாசடைவே காரணமாகும்.

ஆதாரம் : Agencies /வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.