2016-01-02 14:22:00

இது இரக்கத்தின் காலம் - இதயத்தில் இடம் கொடுத்தால்...


அன்பு மருத்துவர் அல்லது காதல் மருத்துவர் (Dr. Love) என்று புகழ்பெற்ற லியோ புஸ்காலியா (Leo Buscaglia) என்ற ஓரு பேராசிரியர் பகிர்ந்துகொண்ட ஓர் அனுபவம் இது: அவர் தென் கலிபோர்னியா பல்கலைக் கழகத்தில் பணிசெய்தபோது, அவரிடம் ஜோயல் என்ற மாணவர் படித்துவந்தார். மிகச்சிறந்த அறிவும், பல்வேறு திறமைகளும் கொண்டவர் ஜோயல். பாரம்பரியம் மிக்க யூத குடும்பத்தில் பிறந்து வளர்ந்திருந்தாலும், கடவுளையும், யூத மத நியதிகளையும் விட்டு வெகுதூரம் விலகிச்சென்றார் ஜோயல். ஏன் வாழ்கிறோம் என்பது தெரியாமல் குழம்பிப் போன அவர், ஒருநாள் தன் வாழ்வை முடித்துக்கொள்ள தீர்மானித்தார்.

சாவதற்கு முன், தன் அபிமான ஆசிரியர் லியோ புஸ்காலியாவைப் சந்திக்கச் சென்றார். தான் எடுத்திருந்த முடிவை அவரிடம் சொன்னார். "உன் வாழ்வை முடித்துக் கொள்வதற்கு முன், நமது பல்கலைக்கழகத்திற்கு அருகில் உள்ள முதியோர் இல்லத்திற்குச் சென்று வா" என்றார் லியோ. தன் அபிமான ஆசிரியர் என்ன சொல்கிறார் என்பதை ஜோயல் புரிந்துகொள்ளவில்லை. எனவே, லியோ விளக்கினார்: "நீ உன் வாழ்வை முடித்துக் கொள்வதற்கு முன், வாழ்வு என்றால் என்ன என்பதை உன் இதயக் கண்கள் கொண்டு நீ பார்க்கவேண்டும்" என்றார். "இதயக் கண்களா?" என்று ஜோயல் அழுத்திக் கேட்டதும், லியோ மேலும் விளக்க ஆரம்பித்தார்: "வாழ்க்கையின் அர்த்தமுள்ள தொடர்புகளையெல்லாம் இழந்து, அந்த முதியோர் இல்லத்தில் வாழ்வோருக்கு உன்னால் என்ன தரமுடியும் என்பதைச் சிந்தித்துப்பார். அங்குள்ளவர்களில் யார், எந்த ஓர் உறவினரும் வராமல் பல மாதங்கள் அல்லது வருடங்கள் காத்திருக்கிறார்களோ, அவர்களைச் சென்று பார்" என்று லியோ சொன்னதும், ஜோயல், "அவர்களிடம் என்ன சொல்லவேண்டும்?" என்று கேட்டார். "என்ன சொல்ல வேண்டும் என்பதை நீயே தீர்மானித்துக் கொள்.. ஆனால், வாழ்வில் ஒரு பிடிப்பை, நம்பிக்கையை உண்டாக்கும் வகையில் எதையாவது அவர்களுக்கு சொல்" என்று சொல்லி அனுப்பினார்.

இந்தச் சந்திப்பிற்குப் பின், ஜோயலுக்கு என்ன ஆயிற்று என்பதை லியோ புஸ்காலியா மறந்துவிட்டார். ஒரு நாள், அவர் பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற ஒரு கால்பந்தாட்டப் போட்டிக்குப் போய்கொண்டிருந்தபோது, ஜோயல் ஒரு பேருந்தில் வந்து இறங்கினார். அவருடன் முதியோர் இல்லத்திலிருந்து பத்து அல்லது பதினைந்து பேர் சக்கர நாற்காலிகளில் வந்து இறங்கினர். ஜோயல் தன் ஆசிரியர் லியோவிடம் வந்தார். "சார், இவர்கள் கால்பந்தாட்டப் போட்டியை நேரில் பார்த்து பல ஆண்டுகள் ஆகிவிட்டதாம். எனவேதான் அவர்களை அழைத்து வந்துள்ளேன்" என்று சொன்னார். சிறிது தூரம் சென்றபின், லியோவின் கைகளை இறுகப் பற்றியபடி ஜோயல் பேசினார்: "என் இதயத்தின் கண்களைத் திறந்து மற்றவர் தேவைகளை எனக்குச் சொல்லித் தந்தீர்கள். மிக்க நன்றி." என்று சொன்னார்.

தான், தனது உலகம் என்ற சிறு வட்டத்திற்குள் வாழ்வின் பொருளைத் தேடி விரக்தியடைந்து, வாழ்வையே முடித்துக்கொள்ளத் தீர்மானித்த ஜோயல், தன் உலகிற்குள் அடுத்தவரை அனுமதித்தபோது, தன் வாழ்வின் பொருளை உணர்ந்தார். இதயத்தில் இரக்கம் சுரந்தால், இதயத்தில் அடுத்தவருக்கு இடம் கொடுத்தால், இவ்வுலகில் அதிசயங்களை ஆற்றலாம்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.