2016-01-01 14:27:00

புத்தாண்டு நாளன்று திருத்தந்தை வழங்கிய மூவேளை செப உரை


சன.01,2015. சனவரி 1, இவ்வெள்ளியன்று கொண்டாடப்பட்ட புத்தாண்டு நாளையும், உலக அமைதி நாளையும் ஒட்டி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வத்திக்கான் புனித பேதுரு வளாகத்தில் கூடியிருந்த பல்லாயிரம் மக்களுக்கு வழங்கிய மூவேளை செப உரை:

அன்பு சகோதர, சகோதரிகளே, காலை வணக்கம், புத்தாண்டு வாழ்த்துக்கள். ஆண்டின் துவக்கத்தில் வாழ்த்துக்களைப் பகிர்ந்துகொள்வது அழகு. வரும் ஆண்டு இன்னும் சிறப்பாக அமையும் என்ற எதிர்பார்ப்புடன் நாம் ஒருவரை ஒருவர் வாழ்த்துகிறோம். இவ்விதம் வாழ்த்துவது, நம்பிக்கை தரும் ஓர் அடையாளம். இருப்பினும், அனைத்தும் இந்த ஒரு நாளில் மாறப் போவதில்லை. நேற்றையப் பிரச்சனைகள் இன்றும் நம்முடன் தங்கியுள்ளன. எனவே, நம்பிக்கை உங்கள் அனைவரையும் தாங்கிச் செல்ல, உங்கள் அனைவரையும் வாழ்த்துகிறேன்.

"ஆண்டவர் உனக்கு ஆசி வழங்கி உன்னைக் காப்பாராக! ஆண்டவர் தம் திருமுகத்தை உன்மேல் ஒளிரச்செய்து உன்மீது அருள் பொழிவாராக! ஆண்டவர் தம் திருமுகத்தை உன் பக்கம் திருப்பி உனக்கு அமைதி அருள்வாராக!" (எண்ணிக்கை நூல் 6: 25,26) என்ற வார்த்தைகளை இன்றையத் திருப்பலியில் கேட்டோம். நானும் இதையே உங்களுக்கு என் வாழ்த்தாகக் கூறுகிறேன். இறைவனின் இரக்கம் நிறைந்த முகம், என்றும் மறையாத பகலவனாக, மிகுந்த ஒளியுடன் திகழட்டும்.

கடவுளின் முகத்தைக் கண்டால், புது வாழ்வு பிறக்கும். ஆனால், அது ஒரு மந்திரக்கோல் கொண்டு சடுதியில் மாறாது. மாற்றங்கள் நமக்குள்ளிருந்து பிறக்கவேண்டும். இறைவன் நம் உள்ளங்களில் நுழைய அனுமதி வேண்டி நிற்கிறார். மண்மீது மிருதுவாகப் பொழிந்து, அங்கு விளைச்சலைத் தரும் மழையைப்போல, இறைவன் நமக்குள் பலன் தரக் காத்திருக்கிறார். ஒவ்வொரு நாள் காலையில் எழும்போது, "இன்று இறைவன் தன் திருமுகத்தை என் மீது ஒளிரச் செய்கிறார்" என்று சொல்வோம்.

"ஆண்டவர் அமைதி அருள்வாராக" என்ற சொற்களுடன், அவரது ஆசீர் தொடர்கிறது. இன்று உலக அமைதி நாள். "அக்கறையின்மையைக் களைந்து, அமைதியை வெல்க" என்பது இந்நாளின் மையக் கருத்து. அமைதியை நிலைநாட்ட, நாம் போராடவேண்டும். நம் ஆன்மாக்களில் நிகழும் போர்களை வெல்லவேண்டும்.

அமைதிக்கு எதிரி, போர்கள் மட்டுமல்ல; அக்கறையின்மையும்கூட அமைதிக்கு எதிரி. அக்கறையின்மையால், நம்மைச் சுற்றி தடைகள், வேலிகள், சந்தேகங்கள் உருவாகின்றன. ஊடகங்கள் வழியே, தகவல்கள் நம்மை வெள்ளமென வந்து சேருவதால், நம் கவனம் திசை திருப்பப்படுகிறது. நம்மைச் சுற்றி துன்புறும் உடன்பிறப்புக்களின் தேவைகளைப் புரிந்துகொள்ளத் தவறுகிறோம். இந்நிலையிலிருந்து நாம் விழித்தெழுந்தால், அமைதியை வெல்லமுடியும்.

அமைதியின் அரசியும், இறைவனின் அன்னையுமான மரியாவே, எங்களுக்கு உதவியருளும். "மரியா இந்நிகழ்ச்சிகளையெல்லாம் தம் உள்ளத்தில் இருத்திச் சிந்தித்துக் கொண்டிருந்தார்" (லூக்கா 2:19) என்று இன்றைய நற்செய்தியில் கேட்டோம். உம் மகனைப் பெற்றெடுத்த வேளையில் சத்திரத்தில் இடம் இன்றி நீர் சந்தித்த பிரச்சனைகளையும், மகனைப் பெற்றதால் நீர் அடைந்த மகிழ்வையும் உள்ளத்தில் இருத்திச் சிந்தித்தீர். அவற்றை உம் செபமாக மாற்றினீர். அதே மனநிலையை எங்களுக்குள் உருவாக்கும். வாழ்வின் இன்ப, துன்பங்கள் எம்மை இறைவனிடம் நெருங்கிவரச் செய்தருளும்.

இவ்வாறு தன் மூவேளை செப உரையை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இறுதியில், இவ்வெள்ளி மாலை தான் புனித மேரி மேஜர் பசிலிக்காவில் புனிதக் கதவைத் திறந்து, இப்புதிய ஆண்டு அமைதியிலும், இரக்கத்திலும் வளர்ந்திட அன்னையிடம் இந்த ஆண்டை ஒப்படைக்கப் போவதாக தெரிவித்தார். தொடர்ந்து, மூவேளை செப உரையை மக்களோடு சேர்ந்து செபித்தார்.

மூவேளை செப உரைக்குப் பின், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தனக்கு வாழ்த்துக்களை அனுப்பியிருந்த இத்தாலிய அரசுத் தலைவருக்கு நன்றி கூறினார். புத்தாண்டு நாளன்று சிறப்பிக்கப்படும் உலக அமைதி நாளையொட்டி, உலகின் பல இடங்களில் மேற்கொள்ளப்படும் அமைதி முயற்சிகளுக்கும் திருத்தந்தை நன்றி செலுத்தினார். ஜெர்மனி, ஆஸ்திரியா ஆகிய நாடுகளிலிருந்து, உரோம் நகருக்கு, கடந்த சில நாட்களாக வருகை தந்திருந்த இளம் பாடகர் குழுவினர் அனைவரையும் திருத்தந்தை சிறப்பாக வாழ்த்தினார். மீண்டும் ஒருமுறை அனைவருக்கும் தன் புத்தாண்டு வாழ்த்துக்களைதே தெரிவித்ததோடு, மரியன்னையின் பாதுகாவலில் அனைவரையும் ஒப்படைத்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.