2015-12-31 13:12:00

புத்தாண்டு செய்தி – 2016 (அருட்பணி. ம. லியோ வில்லியம்)


'புலர்ந்தது புத்தாண்டு, மலர்ந்தது புதுவாழ்வு! பொங்கட்டும் இறையன்பு, தங்கட்டும் நிறைமகிழ்வு! மறையட்டும் சுயநலம், பிறக்கட்டும் பிறர்நலம் - என்று வத்திக்கான் வானொலியின் நேயர்கள் அனைவருக்கும் புத்தாண்டு திருநாள் மற்றும் அன்னை மரியாளின் பெருவிழா வாழ்த்துக்களையும், செபங்களையும் மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன். இப்புதிய ஆண்டில் இறைவன் தாமே நம்மையும், நம் குடும்பங்களையும், சமுதாயத்தையும், நம் தாய்நாட்டையும் மற்றும் இவ்வுலக மக்கள் அனைவரையும் ஆசீர்வதிக்க, வழிநடத்த சிறப்பாக மன்றாடுவோம்.

ஒரு பயணம் வெற்றியடைய முக்கியம், அதன் இலக்கு. இலக்கு இல்லாத எந்தவொரு பயணமும் வீண் பயணமாகிறது. அதேபோல, புலர்ந்திருக்கும் இப்புத்தாண்டு பயனுள்ளதாக அமைய அவசியமானது, ஓர் இலக்கு, ஒரு குறிக்கோள். 'உங்கள் தந்தை இரக்கமுள்ளவராக இருப்பது போல நீங்களும் இரக்கமுள்ளவராக இருங்கள்' என்ற இறைவார்த்தையை மையப்படுத்தி, விருதுவாக்காக்கி நமது திருத்தந்தை பிரான்சிஸ் இறை இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டை இரண்டாம் வத்திக்கான் சங்கத்தின் 50-ம் ஆண்டின் நிறைவின் நினைவாக அறிவித்திருக்கிறார். இப்புதிய ஆண்டில் இறைவனின் இரக்கத்தை நம் வாழ்வில் அனுபவித்து, அதைப் பிறருக்குப் பகிரும் இலக்கைக் கொண்டு வாழ அழைப்பு விடுக்கிறார். இந்த இலக்கை நாம் வாழ்வாக்கிட மூன்று கேள்விகள் தெளிவாக்கப்பட வேண்டும்.

1.            ஏன் இரக்கமுள்ளவர்களாக வாழ வேண்டும்?

2.            இரக்கமுள்ளவர்களாக வாழ்வதில் என்ன பலனிருக்கிறது?

3.            இரக்கமுள்ளவர்களாகிட நாம் என்ன செய்ய வேண்டும்?

இக்கேள்விகளுக்கான பதில்களை 2015-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 11-ம் நாளன்று 'இரக்கத்தின் முகம்' என்னும் தலைப்பில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்ட ஆவணத்தில் தெளிவாகக் கூறுகிறார்.

1. ஏன் இரக்கமுள்ளவர்களாக வாழ வேண்டும்?

லூக். 6:36 – வது வசனத்தில் வாசிக்கிறோம் 'உங்கள் தந்தை இரக்கமுள்ளவராக இருப்பது போல நீங்களும் இரக்கமுள்ளவராக இருங்கள்'. நாம் ஏன் இரக்கமுள்ளவர்களாக வாழ வேண்டுமென்றால், இரக்கம் நிறைந்த தந்தையின் பிள்ளைகள் நாம். தந்தையின் இயல்பில்லாமல், இரக்கமற்று வாழ்வது, நம் இறைசாயலுக்கு, இயல்பிற்கு எதிர்மறையானது. நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இவ்வுலகச் சூழலில் இரக்கத்திற்கு எதிர்மறையான வன்முறைகள் அதிகம் பெருகி வருவதைக் காண்கிறோம்.

•           நாடுகளுக்கிடையே போராட்டம் - இரக்கமற்று ஒருவர் மற்றவரின் உயிரை பறிக்கும் நிலை

•           குடும்பங்களில் அதிகரிக்கும் இரக்கமற்ற நிலை – மன்னிக்கும் மனப்பான்மை இல்லாமையால் மற்றவரைப் பழிவாங்கும் மனநிலை

•           வீதியோரம் கவனிப்பாரற்றுக் கிடக்கும் மனிதரை எவ்விதச் சலனமும் இன்றி கடந்து போகும் நிலை

•           நியாயமான ஊதியம் மறுக்கப்படும் தொழிலாளர்களின் அவல நிலை

•           வருவாய் போதாமல் தத்தளிக்கும் நடுத்தரக் குடும்பத்தினரின் தவிப்பு நிலை

•           சொந்த இடங்களிலிருந்து புலம் பெயர்ந்து அகதிகளாய் நிற்கும் பழங்குடியினரின் பரிதாப நிலை

•           உயர்ந்து நிற்கும் மருத்துவச் செலவுகளின் அபாய நிலை

•           ஊழல், ஏழ்மை, வேலையின்மையின் அகோர நிலை

•           இயற்கை நாம் வாழ இறைவன் கொடுத்த கொடை என்பதை மறந்து, இரக்கமற்று, சுயநலப்போக்கில் பயன்படுத்துவதால், எதிர்பாராத பூமியின் மாற்று நிலை

என்று நாடுகளுக்கிடையேயும், குடும்பங்களிலும், இயற்கையோடு உறவாடுவதிலும் இரக்கமற்ற சூழ்நிலை அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இந்நிலை மறைந்திட, அகன்றிட நாம் கண்டிப்பாக இரக்கம் நிறைந்தவர்களாக மாற வேண்டும், வாழ வேண்டும்.

இரக்கம் இறைவனின் இயல்பு. அதுவே நம் இயல்பாகிட இறைவன் விரும்புகிறார். விவிலியத்தில் இறைவன் இரக்க குணம் கொண்டவராக மட்டுமல்லாமல், இரக்கமே உருவானவராகவும் சித்திரிக்கப்படுகிறார். எகிப்து நாட்டில் இஸ்ராயேல் மக்கள் படும் துன்பத்தைக் கண்டு 'இறங்கி' வரும் இறைவனைக் காண்கிறோம் (வி.ப.3:8). கட்புலனாகாத கடவுளின் சாயலைக் கட்புலனாக்கும் இயேசுவில் (கொலோ.1:15) நாம் கடவுளைக் கண்டுணர்ந்து அவரில், இரக்கத்தின் முழுமையை (எபே.2:4-7) இலவசக் கொடையாக சுவைத்திருக்கிறோம். நாம் பாவிகளாக இருந்தபோதும், கிறிஸ்து நமக்காகத் தியாகப்பலியானார் என்பதில், கடவுளின் அன்பின் தன்மையை நாம் புரிந்து கொண்டோம். இவ்வாறு இறைவனின் இரக்கத்தை இயேசுவில் அனுபவித்த நாம் இரக்கமுள்ளவர்களாக வாழ அழைக்கப்படுகிறோம்.

2. இரக்கமுள்ளவர்களாக வாழ்வதில் என்ன பலனிருக்கிறது?

இரண்டு உன்னதமான பலன்களைக் காண்கிறோம்.

•           இறைவனின் இரக்கத்தை அனுபவிப்பவர் வாழ்வைப் பெற்றுக்கொள்கிறார்

•           பிறருக்கு இரக்கத்தைப் பகிர்வோர் இறைச்சாயலுக்குச் சான்று பகர்கிறார்.

வாழ்வைப் பெற்றுக் கொள்வதும், இறைச்சாயலுக்குச் சான்றுப் பகர்வதும் இரண்டு பலன்களாகிறது. இவ்விரண்டும் இயேசுவின் வாழ்வில் பிரதிபலிப்பதை நற்செய்தியில் காண்கிறோம். யூத சமுதாயத்தில், குருடர்கள், செவிடர்கள், முடக்குவாதமுற்றோர், தொழுநோயாளர்கள், கைம்பெண்கள், விதவைகள், சிறுவர் சிறுமியர், ஏழைகள் அனைவரும், சதுசேயர்கள், பரிசேயர்கள், மூதாதையர்கள், செல்வந்தர்களால் இரக்கமற்று நடத்தப்பெற்று, துன்பப்பட்டு அவதியுற்றார்கள். ஆனால், இரக்கமே உருவான இயேசுவின் சந்திப்பில், வாழ்வைப் பெற்றுக்கொள்கிறார்கள். இறைவனின் இரக்கத்தை அனுபவித்தவர்கள், இவ்வாறு, புதுவாழ்வைப் பெற்றுக்கொள்கிறார்கள்.

இரண்டாவது பலனாக - இரக்கத்தைப் பிறரோடு பகிர்ந்து வாழ்பவர், இறைச்சாயலுக்குச் சான்று பகர்கிறார். இயேசுவின் இவ்வுலக வாழ்வு முழுவதுமே, இறைச்சாயலை, இரக்கத்தின் அடையாளங்கள் வழியாக வெளிப்படுத்துவதை, மையமாகக் கொண்டுள்ளது. அன்னை மரியாளின் வாழ்வும் இதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. கானாவூர் திருமணத்தில் தவித்துப் போய் கிடந்த மக்கள் மத்தியில் இயேசுவின் இரக்கத்திற்காக மன்றாடும் அன்னை மரியாள், ஒரு சிறந்த உதாரணம். ஏழையரின் சிரிப்பில் இறைவனைக் கண்ட முத்திப்பேறு பெற்ற அன்னை தெரசாள், கைவிடப்பட்டவர்கள், நோயாளிகளுக்கு இரக்கத்தைப் பகிர்ந்து இறைசாயலுக்கு சான்று பகர்கிறார்.

3. இரக்கமுள்ளவர்களாகிட நாம் என்ன செய்ய வேண்டும்?

குடும்பங்களில் அன்புறவு வளர்ந்திட வேண்டும். எங்கெல்லாம் இரக்கம் தேவைப்படுகிறதோ, அங்கெல்லாம் இரக்க குணம் பகிரப்பட வேண்டும். ஒப்புரவு அருளடையாளத்தில், அர்த்தத்தோடு, முழுமனதோடு, முழுத்தயாரிப்போடு பங்கெடுப்பதின் மூலமாக, இறைவனின் இரக்கத்தை நாம் அனுபவிக்கின்றோம். இயற்கையோடு, இறைசாயலை பகிர்ந்து வாழ்கின்றபோது, நாம் இரக்கத்தை அனுபவிக்கிறோம். நமது ஆன்மீக கடமைகளிலும், சமூகக் கடமைகளிலும் இரக்கம் கொண்டு வாழுகின்ற போது, நாம் இரக்கத்தை அனுபவிக்கிறோம், பகிர்ந்து கொள்கிறோம். மத்தேயு நற்செய்தி 25-வது அதிகாரத்தில் சொல்லப்படுவது போல, இச்சிறிய சகோதர சகோதரிகளுக்கு செய்கிற ஒவ்வொரு செயலும் நீங்கள் எனக்கே செய்தீர்கள் என்ற பட்டியலை அங்கே இயேசு சொல்வதை வாசிக்கக் கேட்கிறோம். அந்தப் பட்டியலில் சொல்லப்பட்டிருப்பவை அனைத்தையும் நம் வாழ்வில் கடைப்பிடிக்கின்ற பொழுது, துன்பப்படுகிறவர்களுக்கு ஆறுதலாகவும், சிறையில் இருப்பவர்களை சந்திக்கின்ற பொழுது, வேதனையில் உழல்வோர்களுக்கு ஆறுதல் வார்ததைகளை பகிர்ந்து கொள்கின்ற பொழுது,   உதவியை நாடி வருகின்றவர்களுக்கு உதவிக்கரம் நீட்டுகின்றபோதெல்லாம், நாம், இரக்கத்தை அனுபவித்து, பகிர்கிற மக்களாக மாற்றம் பெறுகிறோம்.

ஆகவே அன்பிற்குரியவர்களே இந்நன்னாளில், இந்த அருமையான புதிய ஆண்டை தொடங்கியிருக்கிற இவ்வேளையிலே, ஏன் இரக்கத்தைக் கொண்டு வாழவேண்டும் என்று மிகத் தெளிவாக நாம் தியானித்துள்ளோம். இப்புதிய ஆண்டில் இரக்கத்தை இலக்காக கொண்டு நாம் வாழ்ந்திட முயற்சி செய்வோம். இறைவன் தாமே நம்மையும், நம் குடும்பங்களையும், நம் சமுதாயத்தையும், நம் தாய்நாட்டையும் நிறைவாக ஆசீர்வதிக்க தொடர்ந்து ஜெபிப்போம். புத்தாண்டின் ஆசீரையும், அன்னை மரியாளின் பரிந்துரையையும் உங்கள் அனைவருக்கும் தெரிவித்து, ஜெபத்தோடு வாழ்த்துகிறேன். இறைவன் தாமே உங்களை நிறைவாக ஆசீர்வதிப்பாராக.

அருட்பணி. ம. லியோ வில்லியம், சேலம் மறைமாவட்டம்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©.