2015-12-31 15:17:00

இது இரக்கத்தின் காலம்...முன்னுரையும் முதல் நாளும்


புதிய ஆண்டில், புதிய சிந்தனைகள், புதிய முயற்சிகள், புதிய தீர்மானங்கள் என்பது நம் அனைவரின் கனவு.

கடந்த ஆண்டுகளில் நம் வானொலி நிகழ்ச்சியின் முதல் நிமிடம், வரலாற்றில் இன்று, நாளுமொரு நல்லெண்ணம், கவிதைக் கனவுகள், வாழ்ந்தவர் வழியில், கற்றனைத்தூறும், புனிதரும் மனிதரே, கடுகு சிறுத்தாலும் என்ற பல வடிவங்களில் உங்களை வந்தடைந்தது. முதல் நிமிட சிந்தனைகள், நூல் வடிவிலும் நம் வானொலி குடும்பத்தினரை அடைந்துள்ளன.

2016ம் ஆண்டு, நம் முதல் நிமிட நிகழ்ச்சியாக இடம் பெறவிருப்பது - இது இரக்கத்தின் காலம்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் தலைமைப்பணியின் உயிர்மூச்சாக, தாரக மந்திரமாகக் கொண்டிருப்பது இரக்கம் என்று சொன்னால், அது மிகையல்ல. இரக்கத்தில் இவ்வுலகம் இன்னும் அதிகமாய் நனையவேண்டும் என்ற ஆழ்ந்த தாகத்துடன், இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டினை திருத்தந்தை அறிவித்துள்ளார்.

2015ம் ஆண்டு, டிசம்பர் 8ம் தேதி, கத்தோலிக்கத் திருஅவையில் துவங்கிய இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டு, இவ்வாண்டு, நவம்பர் 20ம் தேதி முடிய நீடிக்கும். இந்த சிறப்பு யூபிலி ஆண்டில், நம் வானொலி நிகழ்ச்சியின் முதல் நிமிடம், இரக்கத்தில் தோய்ந்த நிகழ்வுகளாக, கதைகளாக, கவிதைகளாக, கூற்றுக்களாக அன்பு நேயர்களை வந்தடையும்.

ஒவ்வொரு நாளும் நாம் பகிர்ந்துகொள்ளும் முதல் நிமிடம், நம்மில் இரக்க உணர்வுகளை வளர்த்து, இவ்வுலகை இன்னும் இரக்கம் நிறைந்த இல்லமாக மாற்றும் என்ற நம்பிக்கையுடன், இன்று துவங்குகிறது... இது இரக்கத்தின் காலம்...

 

01.01.2016 இது இரக்கத்தின் காலம்...  ஒரு சிறு அடையாளச் செயல்கூட போதும்

மேற்கு மிச்சிகன் மாநிலத்தில் பதினைந்து வயது சிறுவன் ஒருவன் புற்று நோயால் பாதிக்கப்பட்டான். கீமோ தெரப்பி என்னும் சிகிச்சை பெற்ற சிறுவனுக்கு தாங்கொண்ணா வேதனை. ஏனென்றால் அவனுடைய  தலையிலிருந்த முடி எல்லாம் கொட்டி விட்டது. வழுக்கை தலையோடு பள்ளிக்குச் செல்ல வெட்கப்பட்டான். சில நாட்கள் கடந்து, அவன் பள்ளிக்குச் சென்ற போது, அவனுக்கு மிகப்பெரிய வியப்பு காத்திருந்தது. அவனுடைய வகுப்பில் பலர் மொட்டையடித்து வந்திருந்தனர். அவன் மீது அன்புகொண்ட சிறுவர்கள், புதிய முறையில் தங்களது இரக்கத்திற்கு செயல் வடிவம் கொடுத்தனர். நண்பர்களின் அச்செயல், இரக்கத்தின் உன்னதத்தைப் புரியவைத்தது.

வீட்டிலேயே அடைபட்டு கிடக்கும் வயதானவர்களோடு பேசி, நலம் விசாரிப்பது, நோயுற்றோரையும், காயமடைந்தவர்ளையும் சென்று சந்திப்பது, படுத்த படுக்கையாய் இருப்பவர்களுக்கு உணவு சமைத்து எடுத்துச்செல்வது, உடல் ஊனமுற்றவர்களை, தனிமையில் வாடுபவர்களை அக்கறையோடு விசாரிப்பது போன்ற செயல்களை நாம் செய்ய, எவை தடையாக இருக்கின்றன என சிந்திப்போம் முதலில், செயல்படுவோம் இன்றுமுதல்.

அனைவருக்கும் எம் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©.