2015-12-30 15:36:00

பிலிப்பைன்ஸ் பொதுத் தேர்தலையொட்டி பத்துக் கட்டளைகள்


டிச.30,2015. 2016ம் ஆண்டு, பிலிப்பைன்ஸ் நாட்டில் நடைபெறவிருக்கும் பொதுத் தேர்தலையொட்டி, மக்கள் எவ்விதம் செயலாற்றவேண்டும் என்பதை வலியுறுத்தி, அந்நாட்டு ஆயர் பேரவை, பத்துக் கட்டளைகளை வெளியிட்டுள்ளது.

பிலிப்பைன்ஸ் ஆயர் பேரவை, எந்த ஒரு வேட்பாளரையும் ஆதரிக்கவில்லை என்பதை இவ்வறிக்கையின் துவக்கத்தில் தெளிவுபடுத்தும் ஆயர்களின் அறிக்கை, அவ்விதம் தங்களையே அறிமுகப்படுத்தும் வேட்பாளர்களை நம்பவேண்டாம் என்பதை முதல் கட்டளையாகத் தந்துள்ளது.

கிறிஸ்துவை வாழ்வின் எடுத்துக்காட்டாக முன்னிறுத்தி, அவரது வழியில் மக்களுக்குப் பணிபுரிய விழையும் உண்மையானத் தலைவர்களை இனம் காண்பது, குடிமக்களின் முன்பு உள்ள சவால் என்று ஆயர்கள் கூறியுள்ளனர்.

பொது வாழ்விலிருந்து மதங்களை முற்றிலும் அகற்றப்போவதாகக் கூறும் வேட்பாளர்களுக்கு கிறிஸ்தவர்கள் ஆதரவளிக்கக் கூடாது என்பதை வலியுறுத்தும் ஆயர்கள், ஏனைய மத உணர்வுகளைப் புண்படுத்தும் வேட்பாளர்களுக்கும் ஆதரவு தரக்கூடாது என்பதைத் தெளிவுபடுத்தியுள்ளனர்.

ஆக்கப்பூர்வமான கொள்கைகளையும், செயல்களையும் முன்னிறுத்தாமல், மற்ற வேட்பாளர்களை தரக்குறைவாகப் பேசும் வேட்பாளர்களையும் மக்கள் நம்பக்கூடாது என்பதை, ஆயர்கள் தங்கள் பத்துக் கட்டளைகளில் ஒன்றாகக் கூறியுள்ளனர்.

ஆதாரம் : CBCP / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.