2015-12-30 15:52:00

திருத்தந்தையின் உகாண்டா பயணத்தின் முதல்மாத நினைவு


டிச.30,2015. எளிமை, பணிவு, பெரும் மனித நேயம், அனைவரையும் அரவணைக்கும் மனது என்ற பண்புகள், திருத்தந்தையின் உகாண்டா பயணத்தில் வெளிப்பட்டன என்று அங்குள்ள மக்கள் நினைவுக்கூர்வதாக அந்நாட்டு ஆயர், ஜோசப் பிரான்செல்லி (Joseph Franzelli) அவர்கள் கூறினார்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நவம்பர் 27 முதல் 29 முடிய ஆப்ரிக்காவின் உகாண்டா நாட்டில் மேற்கொண்ட திருத்தூது பயணத்தின் தாக்கத்தை ஒரு மாதம் சென்று வத்திக்கான் நாளிதழ் ‘L'Osservatore Romano’வுக்கு அளித்த பேட்டியில் ஆயர் பிரான்செல்லி அவர்கள் இவ்வாறு பகிர்ந்துகொண்டார்.

உகாண்டாவில் வாழும் கத்தோலிக்கர்கள், திருத்தந்தையை, அன்பான ஒரு தந்தையாக, ஆயராக, திருஅவையின் தலைவராகக் கருதிய அதே வேளையில், ஏனையக் கிறிஸ்தவர்கள் மற்றும் இஸ்லாமியர் அவரை இறைவனின் தூதராகக் கண்டனர் என்றும், அவர் மீது அளவற்ற மதிப்பு கொண்டுள்ளனர் என்றும் ஆயர் பிரான்செல்லி அவர்கள் தன் பேட்டியில் குறிப்பிட்டார்.

இன்னும் உறுதியான ஒருங்கிணைப்பு, மனித குலத்திற்குப் பணியாற்றுதல் என்ற எண்ணங்களே, உகாண்டா மக்களுக்கு திருத்தந்தை விட்டுச் சென்றுள்ள பரிசுகள் என்று ஆயர் பிரான்செல்லி அவர்கள் தன் பேட்டியில் சிறப்பாக எடுத்துரைத்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.